Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 30/09/2011

தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை

தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை (NEFT)
NATIONAL ELECTRONIC FUND TRANFER
(அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்)

1. தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறை என்றால் என்ன ?

தேசிய அளவில் தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் ஏதாவது   ஒரு வங்கியின் கிளையிலிருந்து மற்றொரு வங்கியிலுள்ள தனிநபர், நிறுவன அமைப்பு, குழுமங்களின் கணக்கிற்கு மின்னணு முறையில் பணத்தை அனுப்பிட உதவிடும் முறையே தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறைஆகும்.

2. எல்லா வங்கிக்கிளைகளும் இந்த முறையிலுள்ள கணினி வலைத்தள இணைப்பில் உள்ளனவா ?

இந்த நிதிமாற்றத்தில் பங்கேற்கபடும் வலைதளத்தில் இருக்கவேண்டுமாயின், ஒரு வங்கிக்கிளை இந்த இணைப்பினை ஏற்கும் வசதியுடையதாக இருக்கவேண்டும். 2011ன் ஜனவரி மாத இறுதியில், நாட்டிலுள்ள 101 வங்கிகளின் 74680 கிளைகள் (மொத்தம் 82400 வங்கிக்கிளைகளில்)  NEFT இணைப்பினை ஏற்கும் திறனுடையதாயின. அதிகமான வங்கிகள்/ கிளைகள்/ அலுவலகங்களை விரிவுபடுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

3. தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறையில் பங்கேற்கும் வங்கிக் கிளைகள் குறித்த விவரங்களை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் ?

இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கிகளின் பட்டியலை http://www.org.in./scripts/neft.aspx என்ற இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளது.  NEFT யில் பங்கேற்கும் வங்கிகளின், கிளைகளிலும் தகவல்கள் கிடைக்கும்.

4. யாரெல்லாம் NEFT முறையைப் பயன்படுத்தி பணம் அனுப்பலாம்?

வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் இம்முறையை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.  வங்கிக்கணக்கு இல்லாதவர்கள்கூட NEFT இணைப்பிலுள்ள வங்கிக்கிளையில் நுழைந்து அதன் மூலம் NEFT முறையை பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.  இத்தகு வாடிக்கையாளர் பணத்தை வங்கியில் செலுத்த வசதியாக தனியானதொரு பரிவர்த்தனைக் குறியீட்டு எண் (50) NEFTயில் வழங்கப்பட்டுள்ளது.   இத்தகு வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல்களை (முகவரி, தொலைபேசி எண் முதலியன) தரவேண்டும்.  இதனால், வங்கிக்கணக்கு ஏதுமின்றி பணம் செலுத்துபவர் பணமாற்ற பரிவர்த்தனையை செய்திட முடியும்.

5. NEFT மூலம் யார் பணம் பெறலாம்?

ஒரு வங்கிக்கிளையில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் NEFT முறையை பயன்படுத்தி பணம் பெறலாம். ஆகவே பணத்தை பெறுபவர்(பயனாளி) NEFT இணைப்பில் உள்ள வங்கிக்கிளையில் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும்.

ஒரு வழி பணமாற்றத்தை இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே நடத்திட NEFT வழிவகுத்துள்ளது.  இதன்மூலம் நேபாளத்தில் உள்ள ஒருவருக்கு NEFT இணைப்பில் உள்ள வங்கிக்கிளைமூலம் பயனாளிக்கு வங்கிக்கணக்கு இருந்தாலும் இல்லாமல் போனாலும் பணத்தை நேபாளத்தில் உள்ளவர் இதன்மூலம் பணத்தை நேபாள ரூபாயில் பெறுவார்.  இந்த பரிவர்த்தனைக்காக சிறப்பு குறியீட்டு எண்(51) கொடுக்கப்பட்டுள்ளது.  இந்தியா நேபாளத்துக்கு இடையேயான பண அனுப்புதல் திட்டம் குறித்த தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் http://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/84489.pdf  என்ற இணைய தளத்தில் பெறலாம்.

6. NEFTமூலம் செய்யப்படும் பணமாற்றத்திற்கு ஏதாவது வரம்பு உண்டா?

NEFTஐப் பயன்படுத்தி பணத்தை அனுப்புவதில் குறைந்தபட்சம் அல்லது அதிகபட்சம் என்று எந்த வரம்பும் கிடையாது.  ஆயினும் வங்கியில் கணக்கு வைக்காத வாடிக்கையாளர்கள் (கே.எண் 4 மற்றும் 5ல் குறிப்பிட்டது போல்) இந்திய – நேபாள பண அனுப்புதல் திட்டத்தின்கீழ் பணம் அனுப்புபவர் உட்பட அனுப்பும் பணத்திற்கு அதிகபட்ச உச்சவரம்பு ரூ.49,999/- ஆகும்.

7. இந்த முறை ஏதாவது மைய அலுவலகத்தைச் சார்ந்ததா ? அல்லது பூகோள ரீதியாக பரப்பளவு எல்லைகள், கட்டுப்பாடுகள் இதில் உண்டா?

இல்லை.  மையம் சார்ந்தோ அல்லது பூகோள எல்லைகளோ, கட்டுப்பாடுகளோ இதில் கிடையாது.  ஒரு மையத்தோடு ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளின் கணக்கு இதில் பயன்படுத்தப் படுகிறது.  பணம் அனுப்பும் வங்கி, பணம் பெறும் வங்கி இவற்றின் கணக்குகள் ஒரே மையத்திலிருந்து அல்லது மும்பையிலிருந்து செயல்படுத்தப்படுகின்றன.  இதில் பங்கேற்கும் வங்கியின் கிளை இந்தியாவில் எங்குவேண்டுமானாலும் (இணையதளத்தில் அட்டவணை கொடுக்கப்  பட்டுள்ளது) இருக்கலாம்.

இந்தியா-நேபாளத்திற்கு இடையேயான பண அனுப்புதல் (கே.எண் 5ல் குறிப்பிட்டபடி) வசதிக்காக NEFT முறையில் நேபாளத்திலுள்ள வங்கிக்கிளைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

8. தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை செயல்படும் நேரம் என்ன?

வாரநாட்களில் ஒரு நாளைக்கு 11 தடவைகளாக காலை 9 மணிமுதல் 7மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 9  மணி முதல் 1மணி வரை 5 தடவைகளாகவும் பரிவர்த்தனைகள் செய்யப்படும்.

9. தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறை எவ்வாறு செயல் படுகிறது ?

முதல்நிலை : பணத்தை NEFT மூலம் அனுப்பிட விரும்பும் தனிநபர், வர்த்தக நிறுவனம் அல்லது குழுமம் ஒரு விண்ணப்பப் படிவத்தை பயனாளியின்  விவரங்களை (பெயர், கணக்கு வகை மற்றும் கணக்கு எண், பயனாளி வங்கியின் IFSCஎண்போன்ற)  அளிக்கும்வகையில் பூர்த்திசெய்து தரவேண்டும் பரிவர்த்தனை  தொடங்கும் வங்கியில் விண்ணப்பப்படிவம் கிடைக்கும்.  பணத்தை அனுப்புவர் தனது வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை பற்றுவைத்து பயனாளிக்கு அனுப்பிட வங்கிக்கு அதிகாரம் அளிப்பார். இணையதள வலை (Net Banking) வழி வங்கிச் சேவை அளிக்கும் வங்கி கிளையின் வாடிக்கையாளர் கணினி வழியாகவோ(on-line) பணம் அனுப்புவதற்கான வேண்டுகோளை அனுப்பிடலாம்.  சில வங்கிகள் ATM மூலமாகவும் NEFT வசதிகளை அளிக்கின்றன. வங்கிக்கு கணக்குஏதும் வைக்காமல் வந்துபோகும் வாடிக்கையாளராக இருக்கும்பட்சத்தில், தங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான தகவல்களை (முழு முகவரி, தொலைபேசி எண் போன்றவை) வங்கியின் கிளையில் தரவேண்டும்.  இதனால், ஏதாவது காரணத்தால் பணத்தை உரிய பயனாளிக்கு  அனுப்ப முடியாவிட்டால் அவரின்கணக்கில் வரவு வைக்க முடியாவிட்டால், தள்ளுபடி செய்யப்பட்டால், வங்கி அவரைத் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.

இரண்டாம் நிலை ; தேசிய மின்னணு பணப் பரிவர்த்தனை முறையில் பணம் அனுப்பும் வங்கிக்கிளையானது,  பரிவர்த்தனைக்கான தகவலை தனது சேவை மையத்திற்கு (NEFT Service Centre/Pooling Centre) அனுப்பிடும்.

மூன்றாம் நிலை : அந்த சேவை மையம், தனக்கு அளிக்கப்பட்ட தகவலை NEFTக்கான தேசிய தீர்வு மையத்திற்கு (இந்திய ரிசர்வ் வங்கி மும்பை அதன்மூலமாக தேசிய தீர்வு மையத்திற்கும்) உடனடியாக உள்ள தீர்வு செயல்பாட்டில் சேர்க்கப்படும் பொருட்டு அனுப்பிடும்.

நான்காம் நிலை : தீர்வு மையத்தில் ரிசர்வ் வங்கி பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை, இறுதிகட்ட (பணம்போய்சேரும்) வங்கிகள் வாரியாகப் பிரித்து இறுதியாக வங்கிகளுக்கு வங்கிகளுக்கிடையிலான நிகர பற்று அல்லது நிகர வரவுக்கான கணக்கினை எழுதும். பின்னர் வங்கிவாரியாகத் தனித்தனி பண அனுப்பீடு தகவல், வங்கிகளுக்கு அனுப்பப்படும்.

ஐந்தாம் நிலை : பணம் பெறும் வங்கி, தீர்வு மையத்தியிலிந்து பெறும் தகவலை பரிசீலித்து பயனாளிகளின் கணக்குகளில் முறையான வரவுகளை வைத்திடும்.

10. IFS Code என்பது என்ன ?

NEFT முறையில் பங்கேற்கும் வங்கிக் கிளையை அடையாளங்காட்டும் வகையில்  இந்திய நிதியியல் முறைமை சார்ந்த, எண்களாலும் எழுத்துக்களாலும் ஆன Code, IFS Code ஆகும்.  இதில் 11 இலக்கங்கள் உள்ளன.  இவற்றில் முதல் 4 இலக்கங்கள் வங்கியையும், கடைசியில் உள்ள 6 இலக்கங்கள் வங்கியின் கிளையையும் அடையாளம் காண உதவும். 5 வது இலக்கம் 0 ஆக இருக்கும்.  இவை பணம் போய்சேரும் கடைசிகட்ட வங்கிக் கிளைக்கு தகவல் அனுப்ப இந்த  IFS Code உதவுகிறது.

11. ஒரு வங்கிக்கிளையின் Code என்ன என்பதை எவ்வாறு அறிவது ?

NEFT முறையில் பங்கேற்கும் அனைத்து வங்கிக்கிளைகளிலும் வங்கிகள் வாரியாக IFS Code பட்டியல் கிடைக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின்  www.rbi.org.in/Scripts/neft.aspx என்ற இணைய தளத்திலும் இந்தப் பட்டியல் உள்ளது.  வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கிளை அளிக்கும் காசோலைகளிலும் IFS Codeஐ அச்சிட்டுத் தரும்படி வங்கிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளன.  கணினி வலைதளம் (Net Banking) வாயிலாக வங்கிச்சேவைகள் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக, அவர்கள் தேடும் வங்கிக்கிளைகளின் IFS Codeஐ எழுப்பித் தரும்படி தேடும் வசதிகள் உடையனவாகி வங்கிகள் வலைதளத்தை அமைத்துத் தந்துள்ளன.

12. NEFT பரிவர்த்தனைகளுக்கான பரிசீலனை அல்லது சேவைக்கட்டணங்கள் ஏதேனும் உண்டா?

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31, 2011 வரை இத்தகு கட்டணங்களை தள்ளுபடி செய்துவிட்டது.  ஆகவே இதில் பங்கேற்கும் அங்கத்தினர் வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு ஏதும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.  மேலும் இவ்வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் கட்டணங்களையும் இந்திய ரிசர்வ் வங்கி சீர்திருத்தி பின்வருமாறு அமைத்துள்ளது.

a) பணம் போய்ச்சேரும் வங்கிகள் (பயனாளியின் கணக்கில் வரவு)

-  இலவசம், பயனாளியிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

b) பரிவர்த்தனை தொடங்கும் (பணம் அனுப்பும்) வங்கிக்கிளைகள் (அனுப்புவருக்கு கட்டணம்)

-  ரூ. 1 லட்சம் வரை - ரூ.5 மிகாமல் ( + சேவை வரி)
- ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை - ரூ.15 மிகாமல் (+ சேவை வரி)
- ரூ. 2 லட்சத்திற்குமேல் - ரூ.25 மிகாமல் (+ சேவை வரி)

இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குப் பணம் அனுப்பிட NEFT முறையில் இந்திய – நேபாள பண அனுப்புதல் திட்டம்) கட்டணங்கள் பின்வருமாறு

a. இந்தியாவில் உள்ள பரிவர்த்தனை தொடங்கும் வங்கிக்கிளை – ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.5 (+சேவை வரி)

b. இந்தியாவிலுள்ள  SBI வங்கிக்கிளை -  நேபாளத்தில் உள்ள SBI வங்கிக்கிளையில் பயனாளி கணக்கு வைத்திருப்பாரானால் -  கட்டணம் ரூ.20 (+ சேவை வரி)

c. இந்த கட்டணத்தை SBI, NSBL உடன் பகிர்ந்துகொள்ளும்.  பயனாளியின் கணக்கில் வரவு  வைக்க NSBL கட்டணம் ஏதும் விதிப்பதில்லை.

d. NSBL ல் பயனாளி கணக்கு வைத்திருக்காத பட்சத்தில் ரூ.5000 வரை அனுப்பும் பணத்திற்கு கூடுதல் கட்டணம் ரூ.50 + சேவைவரியுடன் விதிக்கப்படும்.  ரூ.5000க்குமேல்  பணம் அனுப்பிட கூடுதல் கட்டணம் ரூ.75  + சேவைவரியுடன் விதிக்கப்படும்.

இந்திய – நேபாள பண அனுப்புதல் திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 + சேவை வரி, அதிகபட்சம் ரூ.100 + சேவைவரி, பரிவர்த்தனையின் அளவைப் பொறுத்தும், பயனாளியின் கணக்கில் எவ்வாறு வரவு கொடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தும் அமையும்.

மேலே குறிப்பிட்ட கட்டணத்தை முழுவதும் பணம் அனுப்பும் நபரிடமிருந்து வசூலிக்க, பரிவர்த்தனை தொடங்கும் வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.  பின்னர் அதில் தனது உரிய பங்கை (ரூ.5 + சேவை வரி) எடுத்துக்கொண்டு மீதியை SBI க்கு அனுப்புமாறு வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

13. பயனாளி எப்போது தனது கணக்கில் வரவு கிடைக்குமென்று எதிர்பார்க்கலாம்?

வாரநாட்களில் முதல் 9 தடவைகள் (காலை 9 மணிமுதல் 5மணி வரை), சனிக்கிழமைகளில் (காலை 9  மணி முதல் 12மணி வரை) முதல் 4 தடவைகளில் அனுப்பப்படும் பரிவர்த்தனைகளுக்கு  அதே நாளில் வரவு கிடைக்குமென எதிர்பாக்கலாம்.  வாரநாட்களில்  கடைசி 2  தடவைகள (மாலை 6 மற்றும் 7மணி வரை), சனிக்கிழமைகளில் கடைசி தடவை (மதியம்1மணி) அனுப்பப்படும் பணத்திற்கான வரவு அதேநாளிலோ அல்லது அடுத்த வேலைநாளின் காலையிலோ (பயனாளிக்கு வங்கிக்கிளையில் கிடைக்கும் வசதியைப் பொறுத்து) வரவு கிடைத்துவிடும்.

NEFT முறையில் இந்திய – நேபாளத்திற்கு இடையேயான பரிவர்த்தனைகளில் வரவுகளுக்கான காலக்கெடு குறித்து விரிவாக http://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/84489.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

14. பணம் பெறுபவரின் கணக்கை வரவு வைப்பதில் தாமதம் அல்லது வரவு வைக்கப்படாமலிருந்தால், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

பயனாளியின் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் அல்லது வரவு வைக்கப்படவில்லையென்றால், அந்த வங்கியின் வாடிக்கையாளர் உதவி மையத்தை(CFC) அணுகலாம்.  (பணம் அனுப்புவர் தனதுவங்கியின் CFC அணுகலாம்). வாடிக்கையாளர் உதவி மையங்களின் விவரங்கள் அந்தந்த  வங்கியின் இணையதளத்தில் உள்ளன. அவை இந்திய ரிசர்வ் வங்கியின் http://www.rbi.org.in/scripts/neft.aspx என்ற இணையதளத்திலும் கிடைக்கும்.

இது திருப்திகரமாகத் தீர்க்கப்படவில்லையெனில்  இந்திய ரிசர்வ் வங்கி மும்பையிலுள்ள தேசிய தீர்வு மையத்திலுள்ள NEFT உதவிமையம் (இந்திய ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் உதவிமையம்) அணுகிடலாம்.  இதை மின்னஞ்சல் மூலமாக செய்யலாம் அல்லது பொது மேலாளர், இந்திய ரிசர்வ் வங்கி, தேசிய தீர்வு மையம் – முதல் மாடி, பிரீ பிரஸ் ஹவுஸ், நாரிமன் பாயிண்ட், மும்பை 400 027 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பலாம்.

15. பயனாளியின்  கணக்கில் பணம் வரவு வைக்கமுடியாதபட்சத்தில் என்ன நடக்கும்?

ஏதாவது காரணத்தால் பயனாளியின் கணக்கில் பணம் வரவு வைக்கமுடியாது போனால், கடைசிகட்ட வங்கி (பணம்போய் சேரும் வங்கி) அந்த பரிவர்த்தனையை உடனடியாக, பரிவர்த்தனை தொடங்கிய வங்கி (பணம் அனுப்பிய வங்கி)க்கு  திருப்பி அனுப்பிட வேண்டும்.  இதை, அந்த பரிவர்த்தனையை பரிசிலனை செய்த பாட்ச் (batch) முடிந்த  2 மணி நேரத்திற்குள் செய்திடவேண்டும்.

(உம்) ஒரு வாடிக்கையாளர் NEFT முறை மூலம் சேவையளிக்க வங்கியில் 12.05க்கு பணம் அனுப்ப வேண்டுகோளை முன்வைத்தால், அத்தகவலை அந்த வங்கி உடனடியாக NEFT தீர்வு சேவைக்கு (1மணி பாட்சில்) அனுப்பிவைக்கிறார் என்று கொள்வோம்.  பணம் போய்சேரும் கடைசி கட்ட வங்கிபயனாளிக்கு இந்த வேண்டுகோள்படி பணத்தை வரவு வைக்க முடியாதபட்சத்தில், இந்த பரிவர்த்தனையை அடுத்த 2 மணிநேரத்திற்குள் அதாவது 3 மணிக்குள், திருப்பி அனுப்பிவிட வேண்டும்.  இத்தகவல் கிடைத்த உடனே, ஒரு அரைமணி நேரத்திற்குள், அதாவது 3.30 மணியளவில் அந்த பணம் அனுப்பியவரின் கணக்கிலேயே திரும்ப வரவு வைக்கப்படவேண்டும்.  முடிவாகச் சொன்னால், பயனாளிக்கு வரவு வைக்கப்படாத பரிவர்த்தனைகள் அனைத்தும் 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் அனுப்பியவருக்கே மீண்டும் வரவு வைக்கப்பட்டுவிடும்.

16. NEFT முறையைப் பயன்படுத்தி NRE மற்றும் NRO கணக்கிற்கும், கணக்கிலிருந்தும் பணப்பரிமாற்றம் செய்ய முடியுமா?

ஆம். முடியும். இந்தியாவிலுள்ள NRE மற்றும் NRO கணக்குகளுக்கும் அல்லது அவற்றிலிருந்தும் பணப்பரிமாற்றங்களை செய்ய NEFTமுறையைப் பயன்படுத்தலாம்.  ஆயினும், இது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 2000ன் விதிகளுக்கு உட்பட்டது.

17. NEFTமுறையில் அயல்நாட்டிலிருந்து உள்ளே வரும் பணத்தைப் பெறமுடியுமா?

முடியாது.  இந்தியாவிலுள்ள இம்முறையில் பங்கேற்கும் வங்கிக்கிளைகளுக்கு இடையே பணத்தை ரூபாயில் அனுப்புவதற்கு மட்டுமே NEFTமுறை பயன்படும்.

18. அயல்நாட்டிற்கு NEFTமுறையைப் பயன்படுத்தி பணம் அனுப்பமுடியுமா?

முடியாது. ஆயினும் இந்திய – நேபாள பண அனுப்புதல் திட்டத்தின்கீழ், நேபாளத்திற்கு இம்முறையில் பணம் அனுப்பமுடியும்.  இத்திட்டம் குறித்த விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கியின்  http://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/84489.pdf என்ற இணைய தள முகவரியில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

19. NEFT முறையைப் பயன்படுத்தி வேறு எந்த வகையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்?

கடன் அட்டை வெளியிடும் வங்கிகளுக்கு கடன் அட்டை நிலுவைகளை செலுத்த NEFTபயன்படும்.  இதற்கென தனியாக 52 என்ற அடையாள எண், கடனட்டை  நிலுவைகளை வங்கிகளுக்குச் செலுத்துவதற்காக தரப்பட்டுள்ளது. இத்துடன் கடன் அட்டை வெளியிடும் பயனாளி வங்கியின் IFS Code எண்ணை குறிப்பிட்டு கடன் அட்டை பில்களுக்குரிய பணத்தை NEFT மூலம் செலுத்தலாம்.

20. வேறு ஒரு கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு NEFT பயன்படுமா?

முடியாது.  வரவு வைப்பதை முந்திச்செல்லும் முறையைத் தருவதே NEFT. இதன்மூலம் ஒரு பயனாளி கணக்கிற்குப் பணத்தை அனுப்பி/மாற்றி வரவு வைத்திட மட்டுமே பரிவர்த்தனைகள் NEFT  மூலம் செய்யமுடியும்.

21. பணம் பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன் அனுப்பியவருக்கு ஒப்புகை கிடைக்குமா?

ஆம். பயனாளியின் கணக்கில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டவுடன் பரிவர்த்தனையைத் தொடங்கிய வங்கி, பணம் அனுப்பிய வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி அல்லது மின் அஞ்சல் மூலமாக, பணம் வரவு வைக்கப்பட்ட தேதி, நேரம் ஆகியவற்றை உறுதி செய்து தகவல் தந்திட வேண்டும்.  இதன்பொருட்டு, பணத்தை அனுப்பும்நபர் அவ்வமயம் தனது கைபேசி எண், மின் அஞ்சல் முகவரியை பரிவர்த்தனை தொடங்கும் வங்கிக்கிளையிடம் தருவது அவசியமாகும்.

22. பணத்தை அனுப்பும்நபர் தமது பரிவர்த்தனையை NEFT முறையில் தொடர்ந்து அணுகி ஆராய முடியுமா?

முடியும்.  பணம் அனுப்பும்நபர் பரிவர்த்தனையைத் தொடங்கிய வங்கி மூலம் இதைச் செய்யமுடியும். பரிவர்த்தனையைத் தொடர்ந்து பார்த்து, அதன் நிலையை சொல்வதற்கு தொடங்கும் வங்கிக்கு எப்போதும் வசதி உள்ளது.

23. NEFT முறை மூலம் பரிவர்த்தனை நடத்த தேவையானவை யாவை?

NEFT மூலம் பரிவர்த்தனை நடத்த தேவையானவை பின்வருமாறு

• தொடங்கும் மற்றும் கடைசி கட்ட வங்கி NEFT  வலைமூலம் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

• பயனாளி குறித்த தகவல்கள், பெயர், முகவரி, வங்கிக்கணக்கு எண் போன்றவை

• பயனாளியின் வங்கியின் பெயர் மற்றும் IFS Code எண்.  இணையதளத்தில் வலைதளம் மூலம் வங்கிச்சேவை பெறுவோர், பயனாளியின் வங்கிக்கிளை பெயரை பதிவு செய்யும்போதே கணினித் திரையில் அந்த வங்கிக்கிளைக்கு உரிய IFS Code எண் தோன்றும்படியான சேவைகளை பல வங்கிக்கிளைகள் அமைத்துத் தந்துள்ளன.

24. NEFTன் பிற அம்சங்கள் யாவை?

அக்டோபர் 2005ல்  NEFT தொடங்கப்பட்டது. ஒரு வங்கிக்கிளையிலிருந்து மற்றொரு வங்கிக்கிளைக்கு பணத்தை பாதுகாப்பாக அனுப்பிட  NEFT சிறந்ததொரு முறையாகும்.  இது தொடங்கிய இடத்திலிருந்து முடியும் இடம் வரை மிகப்பாதுகாப்பான, தொழில்நுட்ப முறையைக் கையாளும் PKI கட்டமைப்பு முறையைக் கையாளுகிறது.  மின்னணு முறையில் பணத்தைப் பரிமாற்றம் செய்திட, இந்திய நிதியியல் வலை தளத்தை (INFINET) இது பயன்படுத்துகிறது.  இதில் பங்கேற்கும் கிளைகளின் எண்ணிக்கை, பரவல், அனுப்பப்படும் பணத்தின் அளவு ஆகியவை அதிகரித்துக்கொண்டே வருகின்றன.  இது, இந்த முறையின் பெருகிவரும் புகழையும், மக்கள் இதை ஏற்றுக்கொண்ட விதத்தையும் எடுத்துக்காட்டுகிறது.  NEFT முறை மற்றும் பின்பற்ற தேவையான வழிகாட்டுதல்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் http://www.org.in./scripts/neft.aspx என்ற இணையதள முகவரியில் மேலும் தகவல்கள் பெறலாம்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்