தாராளமாக்கப்பட்ட அனுப்புதல் திட்டங்கள்
இந்தியாவிலுள்ள தனிநபர் குடியிருப்பாளர்கள் பெறும் அந்நியச் செலாவணி வசதிகளுக்காக, எளிமையாக்கப்பட்ட தாராளமாக்கப்பட்ட அனுப்புதல் திட்டம் ஒன்றை பிப்ரவரி 2004ல் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அத்திட்டத்தின்படி ஒரு நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட மூலதன அல்லது நடப்புக்கணக்கு பரிவர்த்தனைகளுக்காகவோ அல்லது அவை இரண்டிற்குமாக சேர்த்தோ தனிநபர் குடியிருப்பாளர்கள் 2,00,000 அமெரிக்க டாலர் வரை அனுப்பலாம். பிப்ரவரி 4,2004 தேதியிட்ட A.P.(DIR Series) சுற்றறிக்கை எண் 64ன்படி இத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது.
பகுதி A.
1. அமெரிக்க டாலர் 2,00,000 மதிப்பிற்கான அனுப்புதல் திட்டம் என்பது என்ன?
இத்திட்டத்தின்படி, ஒரு நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட மூலதன அல்லது நடப்புக்கணக்கு பரிவர்த்தனைகளுக்காக அல்லது அவை இரண்டிற்குமாக சேர்த்தோ தனிநபர் குடியிருப்பாளர்கள் 2,00,000 அமெரிக்க டாலர் வரை அனுப்பலாம்.
2. அத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட மூலதனக்கணக்கு பரிவர்த்தனைகளுக்கு உதாரணத்தைப் பட்டியலிடுக?
இந்திய தனிநபர் குடியிருப்பாளர்கள் அயல்நாட்டில் அசையாச் சொத்துக்கள், பங்கு கடன்பத்திரங்கள் அல்லது வேறு ஏதேனும் சொத்துக்களை இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றியே இத்திட்டத்தின்கீழ் வாங்க முடியும். மேலும் அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்காக தனிநபர்கள், அந்நியச் செலாவணிக் கணக்குகளை அயல்நாட்டில் உள்ள வங்கிகளில் தொடங்கி பராமரித்து வரலாம்.
3. இத்திட்டத்தின்கீழ் தடைசெய்யப்பட்டவை யாவை?
கீழ்க்கண்டவற்றிற்கு இத்திட்டத்தின்படி அனுமதி கிடையாது.
i. பட்டியல் Iல் [(உ.ம்) லாட்டரி டிக்கட்டுகள், பரிசு திட்டங்கள், தடைசெய்யப்பட்ட பத்திரிகைகள்) இதற்கென்றே குறிப்பிடப்பட்ட, தடைசெய்யப்பட்ட நோக்கங்களுக்காக அல்லது அந்நியச் செலாவணி மேலாண்மை (நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகள்) விதிகள் 2000ல் குறிப்பிடப்பட்ட எந்தவொரு நடவடிக்கைக்காகவும் செய்யப்படும் அனுப்புதல்கள்
ii. பன்னாட்டு பரிவர்த்தனைகள்/ பன்னாட்டு வர்த்தக நேரெதிராளிக்கு(Counter party) அனுப்பப்படும் இழப்பீட்டுமுன் பணம் (Margin) அல்லது அதற்கான அழைப்புகளுக்கு பணம் அனுப்புதல்
iii. பன்னாட்டு இரண்டாம் நிலை பங்குச் சந்தைகளில் இந்தியக் குழுமங்கள் வெளியிட்ட அந்நியச் செலாவணி மாற்று பங்குபத்திரங்கள் (FCCB) வாங்குவதற்காக பணம் அனுப்புதல்
iv. அயல்நாட்டில் அந்நியச் செலாவணியில் வர்த்தகம் செய்திட பணம் அனுப்புதல்
v. தனிநபர் குடியிருப்பாளர்கள் அயல்நாட்டில் ஒரு குழுமத்தை நிறுவிட பணம் அனுப்புதல்
vi. பூடான், நேபாளம், மொரிஷியஸ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அனுப்புதல்
vii. ஒத்துழையா தீவிரவாத நாடுகள் (Non-cooperative) என்று அவ்வப்போது நிதிகள் நடவடிக்கைகளுக்கான சிறப்பு கடமைப் படை(FATF)யால் அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அனுப்புதல்
viii. தீவிரவாத/வன்முறை செயல்பாடுகளில் ஈடுபடக்கூடியவர் என்று சந்தேகத்திற்கு இடமளிக்கக்கூடிய நபர் அல்லது அமைப்புகள் என்று இந்திய ரிசர்வ் வங்கியால் வங்கிகளுக்கு அறிவுறுத்தப் பட்டவர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அனுப்புதல்
4. அனுப்புதல்கள் பற்றிய பட்டியல் IIIல் தற்சமயம் உள்ள வசதிகளைத் தவிரவும் கூடுதலாக “தாராளமாக்கப்பட்ட அனுப்புதல் திட்ட வசதி“ உள்ளதா?
அந்நியச் செலாவணி நிர்வாகம் (நடப்புக் கணக்குப் பரிவர்த்தனைகள்) விதிகள் 2000 பட்டியல் IIIன்கீழ் விவரிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட பயணம், வர்த்தக பயணம், கல்விப் பயணம், மருத்துவ சிகிச்சை போன்றவற்றிற்கான அனுப்புதல்களோடு கூடுதலாகவும் இந்த வசதி உள்ளது. மேலும் இத்தகு பரிவர்த்தனைகளுக்கும் இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
ஆயினும் பரிசு மற்றும் நன்கொடைக்கான அனுப்புதலை தனியாக செய்ய முடியாது. இத்திட்டத்தின்கீழ் மட்டுமே செய்யமுடியும். அதன்படி தனிநபர் குடியிருப்பாளர் ஒரு நிதியாண்டில் இத்திட்டத்தின்கீழ் 2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பு வரை நன்கொடைகள், பரிசுகள் ஆகியவற்றை அனுப்ப முடியும்.
5. தனிநபர் குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகளின்மீது ஈட்டிய வட்டி/ஈவுப்பங்கு ஆகிய தொகையினை (முதலீடு தொகை தவிர) மீண்டும் தாய் நாட்டிற்கே கொண்டுவர வேண்டுவது அவசியமா?
இத்திட்டத்தின்கீழ் தனிநபர் குடியிருப்பாளர்கள் செய்யும் அந்நிய முதலீடுகளின்மீது ஈட்டிய வருவாயை தக்கவைத்து அதை மீண்டும் அவர் முதலீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் செய்யப்படும் முதலீடுகள் மீதான வருவாயை மீண்டும் தாய் நாட்டிற்கே கொண்டுவருவது அவசியமில்லை.
6. இத்திட்டத்தின்கீழான அனுப்புதல்கள் மொத்த அடிப்படையிலா அல்லது நிகர (தாய்நாட்டிற்கு கொண்டுவந்தது போக) அடிப்படையிலா?
இத்திட்டத்தின்கீழான அனுப்புதல் மொத்த அடிப்படையில் செய்யப்படுகின்றன.
7. குடும்ப உறுப்பினர்களைப் பொறுத்தவரை இத்திட்டத்தின்கீழான அனுப்புதல் ஒருங்கிணைக்கப்படலாமா?
இத்திட்டத்தின்கீழான சட்டதிட்டங்களை ஒவ்வொரு தனிநபரும் பின்பற்றும் பட்சத்தில் ஒரு குடும்பத்து உறுப்பினர்களின் அனுப்புதல்கள் ஒருங்கிணைக்கப்படலாம்.
8. கலைப்பொருட்கள் (ஓவியம், சிற்பம் ஆகியவை) வாங்கிட நேரடியாகவோ அல்லது ஏல விற்பனை மையங்களுக்கோ இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்ப முடியுமா?
நடப்பிலுள்ள அயல்நாட்டு வர்த்தக கொள்கை மற்றும் இதர சட்டங்களுக்கு உட்பட்டு இத்திட்டத்தின்கீழ் கலைப்பொருட்கள் வாங்கிட பணம் அனுப்பிட முடியும்.
9. பரிவர்த்தனையின் இயல்பையொட்டி அதை இத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கலாமா கூடாதா என்பதை அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கி தீர்மானிக்க வேண்டுவது அவசியமா அல்லது அனுப்புபவரின் உறுதிமொழி அடிப்படையில் அனுமதியளித்து செயல்படலாமா?
அனுப்புபவரின் உறுதிமொழி அடிப்படையில் பரிவர்த்தனையின் இயல்பை கவனித்து, அந்த பரிவர்த்தனை இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது அளிக்கும் அறிவுறுத்தல்களின்படி அமைந்துள்ளது என்று அங்கீகரிக்கப்பட்ட வங்கி சான்று அளிக்கும்.
10. ESOP ல் பங்குகள் வாங்க இத்திட்டத்தின்கீழ் பணம் வாங்க லாமா?
இத்திட்டத்தின்கீழ் ESOP ல் பங்குகள் வாங்க பணம் அனுப்பலாம்.
11. ADR/GDRனுடன் இணைக்கப்பட்ட ESOP (5 காலண்டர் ஆண்டிற்கு 50000 அமெரிக்க டாலர் வரை) தவிரவும், கூடுதலாக இத்திட்டத்தின்கீழ் முதலீடு செய்ய முடியுமா?
ADR/GDRனுடன் இணைக்கப்பட்ட ESOP பங்குகள் தவிரவும் இத்திட்டத்தின்கீழ் முதலீடு செய்ய முடியும்
12. தகுதித்தேவை பங்குகள் (2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அல்லது பன்னாட்டு நிறுவனத்தின் பணமளிக்கப்பட்ட மூலதனத்தில் 1% (எது குறைவோ அது) வாங்குவதோடு கூடுதலாக இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பமுடியுமா?
தகுதித்தேவை பங்குகள் வாங்குவது தவிரவும் இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பிடமுடியும்.
13. இத்திட்டத்தின்கீழ் பரஸ்பர நிதிகள், துணிகர முதலீடுகள், தரமதிப்பீடு செய்யப் படாத கடன்பத்திரங்கள், உறுதிமொழிச் சீட்டுகள் ஆகியவற்றில் ஒரு நபர் முதலீடு செய்ய முடியுமா?
ஆம். மேலும் இத்தகு பங்கு பத்திரங்களில் இதற்கென அயல்நாட்டில் தொடங்கப் பட்டுள்ள வங்கிக்கணக்கின் மூலமாக இத்திட்டத்தின்கீழ் முதலீடு செய்யலாம்.
14. ஒரு தனிநபர் இந்திய குடியிருப்பாளராக இல்லாதபோது அயல்நாட்டில் வாங்கிய கடனை இந்தியாவிற்குத் திரும்பியபின் குடியிருப்பாளர் என்ற முறையில் இத்திட்டத்தின்கீழ் திருப்பித்தர முடியுமா?
இது அனுமதிக்கப்படுகிறது.
15. இத்திட்டத்தின்கீழ் பணம் வெளியே அனுப்பிட குடியிருப்பாளர்கள் நிரந்தர கணக்கு எண் வைத்திருப்பது கட்டாயமா?
இத்திட்டத்தின்கீழ் பணம் வெளியே அனுப்பிட குடியிருப்பாளர்கள் நிரந்தர கணக்கு எண் வைத்திருப்பது கட்டாயமாகும்.
16. ஒரு தனிநபர் குடியிருப்பாளர் தனது சொந்த பயணத்தின்போது உறுதிமொழியின் அடிப்படையில் தனது பெயரிலோ அல்லது ஒரு அனுமதிக்கப்பட்ட பரிவர்த்தனைக்காக வேறொரு பயனாளியின் பெயரிலோ கேட்போலை மூலம் பணம் அனுப்பிட முடியுமா?
இத்திட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள படிவத்தில் அளிக்கப்படும் உறுதிமொழியின் அடிப்படையில் தனிநபர் குடியிருப்பாளர் இவ்வாறு கேட்போலை மூலம் பணம் அனுப்பிட முடியும்
17. இத்திட்டத்தின்கீழ் பணம் எத்தனை முறை அனுப்பலாம்? ஏதாவது கட்டுப்பாடு உண்டா?
எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆயினும் வாங்கிய அந்நியச் செலாவணி அல்லது அனுப்பப்பட்ட மொத்த அந்நியச் செலாவணி ஒரு நிதியாண்டில் மொத்த வரம்பான 2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பினை தாண்டக்கூடாது.
18. பணம் அனுப்புபவர் பூர்த்தி செய்யவேண்டிய கட்டளைகள் என்னென்ன?
தனிநபர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியின் ஒரு குறிப்பிட்ட வங்கிக்கிளையைத் தேர்ந்தெடுத்து அதன் மூலமாகவே இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பிட வேண்டும். பணம் அனுப்புவதற்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டுக்கு முன்னரே அந்த வங்கிக்கிளையில் அவர் கணக்கு வைத்திருக்கவேண்டும். ஒருவேளை பணம் அனுப்ப விரும்பும் நபர் வங்கியின் புதிய வாடிக்கையாளராக இருந்தால், கணக்கு தொடங்குதல், செயல்பாடு மற்றும் பராமரிப்பை வங்கி மிகுந்த கவனத்தோடு கண்காணிக்க வேண்டும். அந்த நபரின் நிதி ஆதாரத்தைக் குறித்து திருப்திப்படுத்திக் கொள்ளும்பொருட்டு, கடந்த ஆண்டின் வங்கிக்கணக்கு அறிக்கையையும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கேட்டுப்பெறலாம். அத்தகு கணக்கு அறிக்கை இல்லாத போனால், கடந்த ஆண்டின் வருமானவரி கணக்கு அறிக்கையை அல்லது ஆணையை கேட்டுப்பெறலாம். விண்ணப்பத்தோடு உறுதிமொழியும் இணைந்துள்ள (குறிப்பிடப்பட்ட) படிவத்தில் பணம் அனுப்புவதன் நோக்கத்தையும், அதற்கான பணம் சொந்த பணம் என்றும் அது திட்டத்தின்கீழ் அனுமதி மறுக்கப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நோக்கங்களுக்கு அனுப்பப்படவில்லை என்று உறுதிமொழியும் வங்கியிடம் பணம் அனுப்பும் நபர் சமர்ப்பிக்க வேண்டும்.
19. ஒரு நிதியாண்டில் அயல்நாட்டிற்கு அனுப்பிய பணத்தை மீண்டும் தாய்நாட்டிற்கு கொண்டு வந்துவிட்ட தனிநபர் மீண்டும் இந்த வசதியைப் பயன்படுத்தி பணம் அனுப்பலாமா?
அயல்நாட்டிற்கு அனுப்பிய பணத்தை, தாய்நாட்டிற்கு ஒரு நிதியாண்டில் 2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பு வரை கொண்டு வந்துவிட்ட தனிநபர், மீண்டும் இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பிட முடியாது.
20. இத்திட்டத்தின்கீழ் அமெரிக்க டாலரில் மட்டும்தான் பணம் அனுப்ப முடியுமா?
ஒரு நிதியாண்டில் அமெரிக்க டாலரில் 2,00,000 மதிப்பு வரை, எளிதில் மாற்றக்கூடிய எந்தவொரு அந்நியச்செலாவணியிலும் பணம் அனுப்பலாம்.
21. இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை நிலையத்தில், பட்டியலிடப்பட்ட குழுமத்தின் மூலதனத்தில் 10% வரையளவு பங்குகளை கொண்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின், பட்டியலிடப்பட்ட பன்னாட்டு குழுமம் ஒன்றின் பங்குகளில் மட்டுமே இந்திய குடியிருப்பாளர்கள் முதலீடு செய்யமுடியும் என்கின்ற பழைய விதி இன்னமும் நடைமுறையில் உள்ளதா?
இத்திட்டத்தின்கீழ் பன்னாட்டு குழுமங்களில் செய்யப்படும் முதலீட்டின் அளவு, மொத்தத் தொகையான 2,00,000 அமெரிக்க டாலர் மதிப்பிற்குள் அடங்கிட வேண்டும். பன்னாட்டு குழுமம் 10% வரையாவது இந்தியக் குழுமத்தில் மாற்று பங்கு முதலீடு செய்திருக்கவேண்டும் என்கின்ற கட்டளை விதி கைவிடப்பட்டுள்ளது.
பகுதி: B
நிதியியல் இடையீட்டாளருக்கான வழிகாட்டுதல்கள்
22. வாடிக்கையாளரின் பொருட்டு பன்னாட்டு முதலீடுகளை செய்யவிரும்பும் இடையீட்டாளர் குறிப்பாக அனுமதி பெற வேண்டுவது அவசியமா?
வங்கிகள் இந்தியாவில் செயல்பாடு இல்லாத வங்கிகள் உட்பட இந்திய ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்தில் (சாஹித் பஹத்சிங் மார்க், மும்பை) உள்ள வங்கிகள் செயல்பாடு மற்றும் மேம்பாட்டுத்துறையிடமிருந்து பிரத்யேக முன் அனுமதி பெற்று இவ்விஷயத்தில் செயல்படுதல் வேண்டும்.
23. எந்தெந்த வகை சார்ந்த கடன் மற்றும் ஈவுப்பங்கு பத்திரங்களில் ஒரு நபர் முதலீடு செய்யலாம்? இதில் ஏதாவது கட்டுப்பாடுகள் உள்ளனவா?
தாராளமாக்கப்பட்ட அனுப்புதல் திட்டத்தின்கீழ் தர அளவீடு அல்லது இது குறித்த வழிகாட்டுதல்கள் ஏதும் தரப்படவில்லை. ஆயினும் ஒரு முதலீட்டாளர் இத்திட்டத்தின்கீழ் அயல்நாட்டில் முதலீடு செய்யும்போது மிகுந்த கவனத்தோடும், விழிப்புணர்வோடும் செயல்படுவது அவசியம்.
24. வைப்புகளின் அடமானத்தின்பேரில் இந்தியரூபாயிலோ, அந்நியச் செலாவணியிலோ கடன் அனுமதிக்கப்படுமா?
இத்திட்டம் அதுபோன்ற எதையும் தெரிவிக்கவில்லை. மேலும் அயல் நாட்டிற்கு பணம் அனுப்பும் வசதிக்கு ஏதுவாக, இந்திய குடியிருப்பாளருக்கு வங்கிகள் எந்தவொரு கடன் வசதியும் செய்து தரக்கூடாது.
25. இத்திட்டத்தின்கீழ் இந்தியாவில் வங்கிகள் குடியிருப்பாளருக்கு அந்நியச் செலாவணியில் கணக்கு தொடங்கலாமா?
இல்லை. இத்திட்டத்தின்கீழ் இந்திய குடியிருப்பாளருக்காக இந்திய வங்கிகள் அந்நியச் செலாவணியில் கணக்கு தொடங்கமுடியாது.
26. அயல்நாட்டிற்கான சேவைகளை இந்தியாவில் மேற்கொள்ளும் அமைப்பு (OBU) ஒன்று அயல்நாட்டில் உள்ள வங்கிக்கிளைக்கு ஒப்பாக கருதி, அந்நியச் செலாவணிக்கணக்கை இத்திட்டத்தின்கீழ் குடியிருப்பாளருகாகத் தொடங்கிட முடியுமா?
இத்திட்டத்தின்கீழ் அயல்நாட்டிற்கான சேவைகளை இந்தியாவில் மேற்கொள்ளும் அமைப்பு (OBU) ஒன்றை இந்தியாவிலுள்ள வங்கியின் அயல்நாட்டு கிளையாகக் கருத முடியாது.
பொதுவான தகவல்
மேலும் தகவல் அல்லது வழிகாட்டுதலுக்கு அந்நியச் செலாவணியில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியையோ அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களிலுள்ள அந்நியச் செலாவணித்துறையை அணுகலாம். |