கேள்வி:
1. உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (KYC) என்றால் என்ன? அது ஏன் தேவை?
பதில்: KYC உங்கள் வாடிக்கையாளரை அறிவீர் என்பதன் சுருக்கம். வங்கி தனது வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரி குறித்த தகவலைப் பெறும் நடைமுறையே ‘உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்’ நடைமுறை. இதனால் வங்கிகள் அளிக்கும் சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்படும். வங்கியில் கணக்குகள் தொடங்கும்போது, இந்த நடைமுறை முடிக்கப்படவேண்டும். வங்கிகள் KYC விவரங்களை அவ்வப்போது திருத்தியமைத்துக்கொள்வதும் அவசியமாகும்.
கேள்வி:
2. ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்கத் தேவையான KYC செயல்பாடுகள் யாவை?
பதில்: வாடிக்கையாளரின் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், தனி நபர் அடையாளச் சான்றாவணம் மற்றும் முகவரிச் சான்று அளிக்கவேண்டியது அவசியமாகும்.
கேள்வி:
3. அடையாளச் சான்றாவணம், முகவரி அடையாளம் இவற்றிற்காக என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்படவேண்டும்?
பதில்: இந்திய அரசு 6 ஆவணங்களை “அலுவலக ரீதியாக மதிப்புள்ள ஆவணங்கள்“ (Officially Valid Documents - OVD) அடையாளச் சான்றாவணமாக அறிவித்துள்ளது. இவையாவன: கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரிக்கணக்கு அட்டை, UIDAI வழங்கும் ஆதார் அட்டை மற்றும் NREGA வழங்கும் பணி அட்டை இவற்றுள் ஏதாவது ஒன்றை அடையாளச் சான்றாவணமாக அளிக்கலாம். இவற்றில் உங்கள் முகவரியும் இருக்குமானால், அதுவே முகவரிச் சான்றாவணமாக ஏற்றுக்கொள்ளப்படும். இவற்றில் உங்கள் முகவரி இல்லாதபட்சத்தில், முகவரியுடன் கூடிய வேறொரு சான்றாவணத்தை அளிக்கவேண்டும்.
கேள்வி:
4. மேற்குறிப்பிட்ட அடையாளச் சான்றாவணம் எதுவும் என்னிடம் இல்லை. என்னால் வங்கியில் கணக்கு தொடங்கமுடியுமா? பதில்: ஆம். முடியும். “சிறுகணக்கு“ என்று கூறப்படும் வங்கிக் கணக்கை நீங்கள் தொடங்கலாம். சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்கள் புகைப்படத்துடன் வங்கி அதிகாரி முன்னிலையில் உங்களின் கையொப்பம் / கைநாட்டு வைத்து சிறுகணக்கைத் தொடங்கலாம்.
கேள்வி:
5. சிறுகணக்கிற்கும் இதர வங்கிக் கணக்குகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?
பதில்: ஆம். சிறுகணக்குகளில் பின்வரும் கட்டுப்பாடுகள் உண்டு.
-
சிறுகணக்குகளில் எந்தவொரு சமயத்திலும் நிலுவைத் தொகை
ரூ.50,000-ஐவிட அதிகமாக இருக்கக் கூடாது.
-
ஒரு ஆண்டில் வரவு வைக்கப்பட்ட மொத்தத்தொகை ரூ. 1,00,000-த்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது.
-
ஒரு மாதத்தில் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணம் அல்லது மாற்றப்பட்ட பணம் ரூ. 10,000-ஐ விட அதிகமாக இருக்கக் கூடாது.
-
அயல்நாட்டிலிருந்து வரும் பணம் இத்தகு கணக்குகளில் வரவு வைக்கப்பட மாட்டாது.
முதலில் இத்தகு கணக்குகள் 12 மாதங்கள் வரை செயல்பாட்டுடன் இருக்கும். அதன்பின்னர், கணக்கு வைத்திருப்பவர் கணக்குத் தொடங்கி ஒரு வருடத்திற்குள் எதாவது அடையாளச் சான்றாவணத்திற்கு (OVD) விண்ணப்பித்ததற்கான சான்றைக் காட்டும்பட்சத்தில், மேலும் 12 மாதங்களுக்கு செயல்பாட்டுடன் விளங்கும்.
கேள்வி:
6. அலுவலக ரீதியாக மதிப்புடைய ஆவணங்கள் (OVD) எதுவும் என்னிடம் இல்லாதபட்சத்தில், என்னால் வங்கிக் கணக்கை (கட்டுப்பாடுகளுடன் கூடிய சிறு கணக்குகள் போல் இல்லாமல்) தொடங்கமுடியுமா?
பதில்: அடையாளச் சான்றாவணத்திற்குப் பின்வரும் ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் கொடுத்து சாதாரண வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும்.
(i) மத்திய / மாநில அரசுத்துறைகள், சட்டரீதியான / நெறிமுறை அதிகாரிகள் பொதுத்துறை நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், பொதுத்துறை நிதிநிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
(அல்லது)
(ii) கெசட் அதிகாரி கையொப்பமிட்டு அத்தாட்சி அளிக்கும் கடிதம் (புகைப்படத்துடன்).
முகவரிச் சான்றிற்குப் பின்வரும் ஏதாவது ஒரு ஆவணம் –
-
சமீபத்திய இரண்டு மாத காலத்திற்குரிய பயன்பட்டு பில்கள் (உ-ம். மின்சாரம், தொலைபேசி, மொபைல்போன், சமையல் எரிவாயு, குடிநீர் வரி போன்றவை).
-
சொத்து / முனிசிபல் வரி ரசீது .
-
அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு / வங்கிக் கணக்கு அறிக்கை.
-
பொதுத்துறை அலுவலகங்கள் / அரசுத்துறைகள் வழங்கும் முகவரியுடன்கூடிய ஓய்வூதிய ஆணைகள்.
-
மத்திய / மாநில அரசுத்துறைகள் சட்டரீதியான / நெறிமுறையாளர்கள் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிதிநிறுவனங்கள், பங்குப்பரிவர்த்தனை நிலையத்தில் பட்டியலிடப்பட்ட குழுமங்கள் தத்தம் பணியாளர்களுக்குக் குடியிருப்புக்காக வழங்கும் ஆணைகள் அலுவலக ரீதியாக இத்தகு நிறுவனங்களுடன் குடியிருப்புக்காக ஏற்படுத்திக் கொள்ளும் உரிமத்திற்கான ஒப்பந்தங்கள்.
-
அயல்நாட்டு ஆட்சிப்பரப்பெல்லையுடைய அரசுத்துறைகள் அல்லது இந்தியாவிலுள்ள அயல்நாட்டுத் தூதரகங்கள் வழங்கும் ஆவணங்கள்.
மேலே குறுப்பிட்டவை பொதுவான வழியாகாது. இவ்வாறு எளிமையாக்கப்பட்ட செயல்முறையை ஒரு வாடிக்கையாளுக்காக ஏற்றக்கொள்ளலாமா என்பது வங்கியின் முடிவிற்கு விடப்படுகிறது.
கேள்வி:
7. என்னுடைய பெயர் மாற்றப்பட்டுவிட்டால், என்னிடம் அலுவலக ரீதியாக மதிப்புடைய (OVD) ஆவணங்கள் புதிய பெயரில் இல்லாவிட்டால், நான் எவ்வாறு வங்கிக் கணக்கைத் தொடங்கமுடியும்?
பதில்: மாநில அரசு வழங்கும் திருமணப் பதிவுச் சான்றிதழ் / பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்ட அரசிதழ் ஆகியவற்றுடன் பழைய பெயரில் உள்ள ஏதாவது மதிப்புடைய சான்றாவணத்தின் நகலுடன் (சான்றொப்பமிடப்பட்டது) வங்கியிடம் அளிக்கலாம். திருமணம் அல்லது பெயர் மாற்றம் செய்தவர்கள் மேற்குறிப்பிட்ட வகையில் வங்கியை அணுகி புதிய பெயரில் கணக்குத் தொடங்கலாம்.
கேள்வி:
8. இடர்வரவு மதிப்பீட்டின் அடிப்படையில் வங்கிகள் வாடிக்கையாளர்களை வகைப்படுத்த வேண்டியது அவசியமா?
பதில்: ஆம். வாடிக்கையாளர்கள், கருப்புப் பண ஒழிப்பு (AML) இடர் வரவு செயல்முறைகளால் கணக்கிடப்படுவார்கள். இந்த மதிப்பீட்டைப் பொறுத்து இடர் வரவு “குறைவு“, “நடுத்தரம்“, “அதிகம்“ என்று வகைப்படுத்தவேண்டுவது அவசியமாகும்.
கேள்வி:
9. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இந்த இடர்வரவு வகைப்படுத்துதலைத் தெரிவிக்கிறார்களா?
பதில்: இல்லை.
கேள்வி:
10. KYC-க்குத் தேவையான ஆவணங்களை நான் வங்கிக்குத் தர மறுத்தால் என்ன நடக்கும்?
பதில்: நீங்கள் KYC-க்குத் தேவையான ஆவணங்களைத் தராவிட்டால், வங்கியால் உங்களின் கணக்கைத் தொடங்கமுடியாது.
கேள்வி:
11. ஆதார் அட்டை அடையாளம் மட்டுமே இருந்தால் வங்கிக் கணக்கைத் தொடங்கமுடியுமா?
பதில்: ஆம். ஆதார் அட்டை, அடையாளம் மற்றும் முகவரிச் சான்றாவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
கேள்வி:
12. வங்கிக் கணக்குத் தொடங்க ஆதார் அட்டையைக் கொடுக்கவேண்டியது அவசியமா?
பதில்: இல்லை. அலுவலக ரீதியாக மதிப்புடைய (OVD) இதர சான்றாவணங்களில் ஏதாவது ஒன்றைக் கொடுக்கலாம்.
கேள்வி:
13. E-KYC என்பது என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?
பதில்: ஆதார் எண் உடையவர்களுக்கு மட்டுமே E-KYC என்பதைச் செயல்படுத்த முடியும். E-KYC-ஐப் பயன்படுத்தி UIDAI-ஐ (Unique Identification Authority of India) உங்களுடைய அடையாளம் / முகவரித் தகவல்களை பயோ மெட்ரிக் ஆதன்டிகேஷன் மூலம் வங்கிக்கிளை / வங்கிவர்த்தக தொடர்பாளருக்குப் பகிர்ந்தளிக்க முடியும். இதற்கு வெளிப்படையான அனுமதியை ஒருவர் கொடுத்தால் போதுமானது. அதன் பின்னர் UIDAI உங்களைப் பற்றிய தகவல்களை (பெயர், வயது, பாலினம், புகைப்படம், முகவரி ஆகியவற்றை) மின்னணு சாதனம் மூலம் வங்கிக்கு அனுப்பிடும். இவ்வாறு அனுப்பப்படும் தகவல் அலுவலக ரீதியாக மதிப்புடைய ஆவணமாகக் கருப்புப் பண தடுப்பு (PML) விதிகளின் கீழ் அனுமதியளிக்கப்படுகிறது. KYC ஐ சோதித்தறியவும் இது உதவுகிறது.
கேள்வி:
14. ஒருவரின் அறிமுகம் வங்கிக் கணக்கிறகுத் தேவையா?
பதில்: இல்லை. அறிமுகம் தேவையில்லை.
கேள்வி:
15. நான் சென்னையில் வசிக்கிறேன். எனது முகவரிச் சான்றாவணம் தில்லியிலுள்ள முகவரியைக் காட்டுகின்றன. சென்னையில் நான் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியுமா?
பதில்: ஆம். சென்னையில் நீங்கள் கணக்குத் தொடங்கமுடியும். அலுவலக ரீதியாக மதிப்புடைய சான்றாவணத்தில் சென்னை முகவரி இல்லாமல் தில்லி முகவரி மட்டும் இருநதாலும் பரவாயில்லை. அந்த சான்றாவணத்தை அலுவலக ரீதியாக மதிப்புடைய சான்றாவணமாக வங்கியிடம் ஒப்படைத்து, சென்னை முகவரியை தொடர்புக்காக உறுதிமொழியுடன் தெரிவிக்கலாம்.
கேள்வி:
16. என்னுடைய வங்கிக் கணக்கை ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாற்ற முடியுமா? மறுபடியும் KYC நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமா?
பதில்: ஒரே வங்கியின் ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குக் கணக்கை மாற்ற முடியும். இத்தகைய மாற்றத்திற்கு KYC நடைமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை. முகவரியில் மாற்றமிருந்தால், புதிய முகவரிக்கான விவரங்களை உறுதிமொழிச் சான்றுடன் அளிக்கவேண்டும். நீங்கள் ஏற்கனவே கொடுத்துள்ள OVD-யில் (அலுவலக ரீதியாக மதிப்புடைய ஆவணங்கள்) உள்ள முகவரி இனி எந்தவிதத்திலும் உங்களுக்குச் சம்பந்தமில்லாததாக (நிரந்தர முகவரியுமில்லை, தற்போதைய முகவரியுமில்லை) ஆகிவிடுமானால், புதிய முகவரிக்கு உரிய சான்றாவணத்தை (OVD) 6 மாதங்களுக்குள் வங்கிக்குக் கொடுத்திட வேண்டும். மற்றொரு வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டுமானால் KYC நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியது அவசியமாகும்.
கேள்வி:
17. நான் ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஒவ்வொரு முறை புதிய கணக்கு (வெவ்வேறுவகை) தொடங்கும்போதும் அடையாளம் மற்றும் முகவரிச் சான்றாவணங்களைக் கொடுக்கவேண்டும்?
பதில்: இல்லை. ஒரு வங்கியில் ஒரு கணக்கிற்காக (சிறுகணக்கு தவிர) KYC தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தால், மற்றொரு கணக்கு தொடங்க சான்றாவணங்களை அளிக்கவேண்டிய அவசியமில்லை.
கேள்வி:
18. என்னுடைய வருமானவரிக் கணக்கு எண்ணை (PAN) எத்தகைய வங்கிப் பரிவர்த்தனைகளில் குறிப்பிடவேண்டும்?
பதில்: கணக்குத் தொடங்கும்போதும், ரூ. 50,000-க்கு அதிகமான பணம் / பணம் சாரா பரிவர்த்தனைகளில் வருமான வரிக் கணக்கு எண் குறிப்பிடப்படவேண்டும். வருமானவரிக் கணக்கு எண் குறிப்பிடப்படவேண்டிய பரிவர்த்தனைகள் பட்டியல் வருமான வரித்துறையின் இணையதளத்தில் உள்ளது. அதைப் பின்வரும் முகவரியில் அணுகலாம்.
http://www.incometaxindia.gov.in/layouts/15/dit/pages/viewer.aspx?grp=rule&cname=CMSID&cval=10312000000000&searchFilter=&k=114b&lsDlg=0
கேள்வி:
19. பற்று / வரவு அட்டைகளுக்கு KYC நடைமுறை பொருந்துமா?
பதில்: ஆம். KYC நடைமுறை பற்று / வரவு / ஸ்மார்ட் அட்டைகளுக்கும் கூடுதலாக வழங்கப்படும் அட்டைகளுக்கும் பொருந்தும். பற்று அட்டை என்பது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வங்கிக் கணக்கு KYC நடைமுறையைப் பின்பற்றியே தொடங்கப்படுவதால், பற்று அட்டை வழங்குவதற்குத் தனியாக KYC நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லை.
கேள்வி:
20. எனக்கு வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் நான் வேறொருவருக்கு வங்கி மூலம் பணம் அனுப்பவேண்டும். KYC எனக்குப் பொருந்துமா?
பதில்: ஆம். உள்நாட்டில் ரூ.50,000-மும் அதற்கும் அதிகமாகப் பணம் அனுப்பும்போதும், அயல்நாட்டுக்குப் பணம் அனுப்பும் போதும் அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு KYC நடைமுறையைப் பூர்த்திசெய்வது அவசியம்.
கேள்வி:
21. பணம் கட்டி வரைவோலை (DD) / கொடுப்பாணை (PO) / பயணக் காசோலைகள் (Travelers Cheques) வாங்க முடியுமா?
பதில்: ஆம். ரூ. 50,000-க்கும் குறைவான தொகைக்கு வரைவோலை, கொடுப்பாணை, பயணக் காசோலைகள் வாங்க முடியும். ஆனால், ரூ. 50,000 மற்றும் அதற்கும் அதிகமான தொகைக்குரிய உபகரணங்களை வங்கிக் கணக்கில் பற்று வைத்தோ அல்லது கணக்கின் மீது காசோலை கொடுத்தோ வாங்கவேண்டும்.
கேள்வி:
22. மூன்றாம் நபர் நிதிப்பொருட்களை (காப்பீடு, பரஸ்பர நிதிநிறுவன முதலீடுகள்) வாங்கும்போது வங்கியிடம் KYC நடைமுறையைப் பின்பற்ற வேண்டுவது அவசியமா?
பதில்: ஆம். வங்கியில் கணக்கு வைத்திராத வந்துபோகும் வாடிக்கையாளர்கள் தங்களின் அடையாளம் மற்றும் முகவரி சான்றாவணங்களை வங்கியில் காட்டியே ரூ. 50,000 மற்றும் அதற்கும் அதிகமான மூன்றாம் நபர் நிதிப் பொருட்களை வங்கியிடமிருந்து வாங்கமுடியும். வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மூன்றாம் நபர் நிதிப் பொருட்களை வாங்கும்போது KYC நடைமுறை தேவையில்லை. ஆயினும், வங்கிக் கணக்கில் பற்று வைத்து ரூ.50,000 மற்றும் அதற்கும் அதிகமான மதிப்புள்ள மூன்றாம் நபர் நிதிப்பொருட்கள் சார்ந்த பரிவர்த்தனைகளை (பணமாற்றம் / காசோலை கொடுத்து தங்கம் / பிளாட்டினம் வாங்குதல் போன்றவை) மேற்கொள்ளும்போது, வருமானவரிக் கணக்கு எண்ணைக் குறிப்பிடவேண்டியது அவசியம். இது வந்து போகும் வாடிக்கையாளருக்கும் பொருந்தும்.
கேள்வி:
23. நான் KYC நடைமுறைத் தேவைகளை கணக்குத் தொடங்கியபோதே பூர்த்தி செய்துவிட்டேன். வங்கி மீண்டும் எதற்கு என்னை KYC தேவைகளைப் பூர்த்திசெய்யக் கோருகிறது?
பதில்: வங்கிகள் KYC பதிவேடுகளில் உள்ள விவரங்களை அவ்வப்போது திருத்தியமைத்து சரிவர பராமரிப்பது அவசியமாகும். வங்கிக் கணக்கு மேலாண்மையில் இது முக்கியமானது. இடர்வரவு மதிப்பீட்டின்படி, வங்கிகள் KYC தகவல்களைப் புதுப்பிக்கும் காலவரையறை நிர்ணயிக்கப்படும். இதனால் வங்கிக் கணக்குகளில் மோசடிகள் நிகழ்வதும் தடுக்கப்படும்.
கேள்வி:
24. சீரான கால அளவில் KYC தகவல்கள் புதுப்பித்தல் / திருத்தியமைத்தல் குறித்த விதிமுறைகள் யாவை?
பதில்: KYC பதிவேடுகளைப் புதுப்பிக்கும் கால இடைவெளி ஒவ்வொரு வங்கிக்கும் அதன் இடர்வரவு குறித்த பார்வையைப் பொறுத்து மாறுபடும். இடர்வரவு அதிகமுள்ள கணக்குகளைப் பொறுத்தவரை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, நடுத்தர இடர்வரவு உடைய கணக்குகளுக்கு எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் குறைந்த இடர்வரவு உடைய கணக்குகளுக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை KYC பதிவேடுகள் திருத்தியமைக்கப்படலாம்.
அவ்வப்போது சீரான இடைவெளியில் KYC பதிவேடுகள் புதுப்பிக்கப்படும்போது, குறைந்த இடர்வரவுடைய கணக்குகளைப் பொறுத்தவரை, பதிவேட்டுத் தகவல்களில் மாற்றமில்லையென்றால், வாடிக்கையாளர்களை “மாற்றம் ஏதுமில்லை” என்ற சுய சான்றிதழ் அளிக்கக் கோரலாம். அவர்களிடம் ஆவணங்களைக் கோராமல் விட்டு விடலாம்.
குறைவான இடர்வரவு உடைய கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் முகவரியில் ஏதேனும் மாற்றமிருப்பின், அதற்கான சான்றாவணத்தின் நகலை (சான்றொப்பமிட்ட) அவர்கள் மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலமாகக் கூட அனுப்பிடக் கோரலாம். இவ்வாறு KYC பதில் திருத்தப்படுவதற்கு இத்தகு வாடிக்கையாளர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை.
உரிய வயது இல்லாத (மைனர்) வங்கி வாடிக்கையாளர்கள், சட்டப்பூர்வ வயதை எட்டும்போது அவர்களின் புகைப்படத்தைக் கொடுக்கவேண்டியது அவசியம்.
கேள்வி:
25. சீரான கால இடைவெளியில் KYC பதிவேடு புதுப்பிக்கப்படும்போது நான்
KYCக்குத் தேவையான ஆவணங்களைக் கொடுக்காவிடில் என்ன நடக்கும்?
பதில்: நீங்கள் கொடுக்காவிட்டால், வங்கி உங்கள் கணக்கை முடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், அவ்வாறு செய்வதற்கு முன், பகுதியளவு உங்கள் கணக்கின் செயல்பாடுகளை முடக்கலாம் (வரவுகளை அனுமதித்து, பற்றுகளைத் தடுத்து, உங்கள் கணக்கை முடித்துப் பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லலாம்). பின்னர் முற்றிலும் கணக்கை முடக்கலாம் (வரவுகளையும் மறுக்கலாம்) எது பற்றியும் உங்களுக்கு முன்னறிவிப்புக் கொடுத்தபின் வங்கி இவற்றைச் செயல்படுத்தும்.
கேள்வி:
26. வங்கிக் கணக்கில் பகுதியளவு முடக்கம் எவ்வாறு விதிக்கப்படும்?
பதில்: பகுதியளவு முடக்கம் பின்வரும் வகையில் விதிக்கப்படலாம்.
-
இதைச் செயல்படுத்தும் முன் வங்கிகள் 3 மாத அறிவிப்பை வாடிக்கையாளருக்கு அனுப்பும்.
-
இந்த அறிவிப்பிற்குப் பின் ஒரு நினைவூட்டல் 3 மாத அவகாசத்திற்கு அனுப்பப்படும்.
-
இதற்குப் பின் வரவுகள் அனுமதிக்கப்பட்டு, பற்று / எடுத்தல் முடக்கப்பட்டு கணக்கினை முடிக்க வாய்ப்பளிக்கப்படும்.
-
முதலில் அறிவிப்புக் கொடுத்த 6 மாதங்களுக்குப் பின்னரும் KYC தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிடில் வங்கியில் உள்ள அந்தக் கணக்கில் பற்று / வரவு அனைத்தும் முடக்கப்பட்டு, அது செயல்படா கணக்காக அறிவிக்கப்படும்.
இதற்கிடையில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் KYC தேவைக்குரிய ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து கணக்கினை சீர் செய்து கொள்ளலாம். |