Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (108.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 22/08/2008

வங்கியில் உள்ள கோரப்படாத வைப்புகள் / செயலற்ற கணக்குகள்

RBI/2008-09 / 138
DBOD.No.Leg.BC.34/09.07.005/2008-09

ஆகஸ்ட் 22, 2008

அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய ஊரக வங்கிகள் நீங்கலாக)

அன்புடையீர்

வங்கியில் உள்ள கோரப்படாத வைப்புகள் / செயலற்ற கணக்குகள்

            அக்டோபர் 1, 1977 தேதியிட்ட எங்களின் சுற்றறிக்கை எண்.DBOD. No. Com.BC.109/C.408/A-77-ஐப் பார்க்கவும். இதில் உள்ளபடி இரண்டாண்டுக்கும் மேலாக பரிவர்த்தனைகள் ஏதும் இல்லாத வைப்புக் கணக்குகளை தனியாகப் பிரித்து அவற்றை தனியானதொரு பேரேட்டில் பராமரிக்க வேண்டுமென்று வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.   மேலும் நவம்பர் 15, 1989 தேதியிட்ட DBOD.No.Leg.BC.45/ C.466(IV)/89 சுற்றறிக்கையையும் பார்க்கவும்.  இதன்படி ஓராண்டு காலத்திற்கு பரிவர்த்தனைகள் ஏதும் இல்லாத கணக்குகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து தகவல் பெறும்பொருட்டு வாடிக்கையாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பலாம்.  அந்தக் கடிதங்கள் பட்டுவாடா செய்யப்படாமல் திரும்பி வந்துவிட்டால் அவை குறித்து விசாரிக்க வேண்டும்.  அந்த வாடிக்கையாளர் எங்கிருக்கிறார், ஒருவேளை இறந்துவிட்டாரா அப்படியானால் அவருடைய வாரிசுதாரர்கள் யார் என்பன போன்ற தகவல்களை வங்கி விசாரித்து அறிந்திட வேண்டும். 

2.         ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் வசம் உள்ள இத்தகு கோரப்படாத வைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.  அவற்றோடு தொடர்புடைய இடர்வரவும் இதனால் அதிகரிக்கிறது.  இதை உணர்ந்து இத்தகு வாடிக்கையாளர் இருக்கும் இடத்தை தேடியறிந்திட வங்கிகள்  சாதகமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.  கணக்குகள் செயலற்றவை என்று வகைப்படுத்தப்பட்டுவிட்டதால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நிறைய புகார்கள் வந்துள்ளன.  தகுதியின்றியே இத்தகு கோரப்படாத வைப்புகளை வட்டி ஏதும் கொடுக்காமல் வங்கிகள் அனுபவித்து வருவதாக ஒரு கருத்து நிலவுகிறது.  இவையனைத்தையும் கருத்தில் கொண்டு எங்களால் வெளியிடப்பட்ட மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை  நாங்கள் மறு ஆய்வு செய்து, செயலற்ற கணக்குகளை கையாளும்போது, கீழே விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.

(i)         பரிவர்த்தனைகள் ஏதுமில்லாத (அவ்வப்போது வட்டி மட்டுமே வரவில் வைக்கப்பட்டு சேவைக் கட்டணங்கள் தவிர வேறு எந்த பற்றும் இல்லாத) செயலற்ற கணக்குகள் வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் மறுஆய்வு செய்திடவேண்டும்.  வங்கிகள் அத்தகைய வாடிக்கையாளர்களை அணுகி, அவர்கள் கணக்குகளில் பரிவர்த்தனைகள் ஏதுமில்லாததன் காரணத்தைக் கண்டறிய எழுத்துமூலம் தகவல் அனுப்ப வேண்டும்.  அவர்கள் இருப்பிட மாற்றத்தின் காரணமாக பரிவர்த்தனைகள் இல்லாமலிருந்தால், அவர்கள் புதிதாக குடியேறிய உள்ள இடத்தில் எங்கே கணக்குகள் வைத்துள்ளனர், அவற்றின் முகவரி இவற்றைக் கண்டறிந்து, இவ் வங்கிக் கிளையில் கணக்கிலுள்ள நிலுவைத் தொகையை அங்கு மாற்றிக் கொள்ள வசதி செய்து தரலாம்.

(ii)        அந்த வாடிக்கையாளருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் திரும்பி வந்துவிட்டால், அவர்கள் இருப்பிடம் குறித்த விசாரணையைத் தொடங்கி, ஒருவேளை அவர் இறந்த்திருந்தால், அவர்களின் சட்டபூர்வ வாரிசுதாரர்களை கண்டறிய வேண்டும்.

(iii)       ஒருவேளை அந்த வாடிக்கையாளர்கள் குறித்த நேரடி தகவல் பெறமுடியாது போனால், அவர்களை அறிமுகம் செய்தவர்களை வங்கிகள் தொடர்பு கொள்ளலாம் அல்லது அவர்களின் முதலாளி அல்லது அவருடன் சம்பந்தமுடைய யாருடைய தகவல் உள்ளதோ அவரைத் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.  வாடிக்கையாளரின் தொலைபேசி / கைபேசி எண் இருந்தால் அதன் மூலமும் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம்.  வாடிக்கையாளர் குடியிருப்பாளரல்லாத இந்தியராயின் அவரை மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொண்டு கணக்கு குறித்த தகவலைத் தெரிவித்து அவரின் ஒப்புதலைப் பெறலாம்.

(iv)       சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் இரண்டாண்டு காலத்திற்கு பரிவர்த்தனைகள் ஏதுமில்லையென்றால் அவற்றை செயலற்ற / தேங்கிய கணக்காக வகைப்படுத்தலாம்.

(v)        வங்கி தொடர்புகொண்டு கேட்கும்போழுது, வாடிக்கையாளர் கணக்கில் பரிவர்த்தனை இல்லாமலிருப்பதற்கு சரியான காரணம் தருவாராயின், அந்தக் கணக்கை மேலும் ஓராண்டிற்கு நடைமுறையிலுள்ள கணக்காகவே வகைப்படுத்தி, அந்த காலகட்டத்திற்குள் பரிவர்த்தனைகள் செய்யும்படி வங்கி வாடிக்கையாளரை வேண்டிடலாம். அவ்வாறு நீட்டிக்கப்பட்ட காலகட்டத்திற்குள், வாடிக்கையாளர் பரிவர்த்தனை ஏதும் நடத்தாவிட்டால், வங்கி அந்த கணக்கை செயலற்ற கணக்காக வகைப்படுத்தலாம்.

(vi)       ஒரு கணக்கை செயலாற்ற கணக்காக வகைப்படுத்தும்போது, வாடிக்கையாளர்தாரராகவோ மூன்றாம் நபர் மூலமாகவோ நடத்தும் பற்று, வரவு பரிவர்த்தனைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.  வங்கி பற்று வைக்கும் சேவைக் கட்டணம் அல்லது வரவு வைக்கும் வட்டி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

(vii)      இவ்வாறு செயலற்ற கணக்குகளைத் தனியாகப் பிரித்து வைப்பதற்கு சில காரணங்கள் உண்டு.  குறிப்பாக மோசடிகள் நடக்கும் வாய்ப்பினைத் தடுப்பதும் ஒரு காரணாமாகும்.  ஆனால் ஒரு கணக்கை இவ்வாறு செயலற்ற கணக்காக அறிவிப்பது, வாடிக்கையாளருக்கு எவ்வகையிலும் அசௌகரியம் ஏற்படுத்திவிடக் கூடாது.  இத்தகு கணக்குகளில் உள்ள அதிகமான இடர்வரவை, அந்த கணக்கிணைக் கையாளும் வங்கிப் பணியாளருக்கு குறிப்பாக உணர்த்திடவும் அவரின் கவனத்தினை அதன்பால் ஈர்க்கவும் இவ்வாறு கணக்குகள் பிரித்து வகைப்படுத்தப்படுகின்றன.  மோசடிகள் நடப்பதைத் தவிர்க்கும்பொருட்டு மேலிடத்திலிருந்து அதன் பரிவர்த்தனையை கவனிக்கலாம்.  சந்தேகத்திற்கு இடமளிக்கும் பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையையும் தயாரிக்கலாம்.  ஆனால் இவை அனைத்தும், வாடிக்கையாளர் அறியாவண்ணம் செயல்படுத்தப்பட வேண்டும்.

(viii)      இத்தகு கணக்குகள் மீதான செயல்பாட்டை மிகுந்த கவனத்தோடு, அந்த வாடிக்கையாளர் குறித்த இடர்வரவு வகைக்கேற்ப வங்கி அனுமதிக்கலாம்.  அந்த கணக்கில் நடக்கும் பரிவர்த்தனை உண்மையானதா?  வாடிக்கையாளரின் கையொப்பம் மெய்யானதா? அவரது அடையாளங்களைக் கண்டறிய முடிகிறதா போன்ற கேள்விகளை கருத்தில் கொண்டு செயல்படுவதையே மிகுந்த கவனத்தோடு செயல்படுவது என்று இங்கே குறிப்பிடுகிறோம்.  இவ்வாறு வங்கி கூடுதல் அக்கறையோடு இவற்றை கவனிப்பதால் வாடிக்கையாளருக்கு அசௌகரியம் ஏற்படாதிருப்பதை வங்கிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

(ix)       இத்தகைய செயலற்ற கணக்குகள் செயலாக்கமுடையதாக மாற்றப்படுவதற்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படக்கூடாது.

(x)        செயலற்ற இத்தகு கணக்குகள் உள்ள பேரேடுகள் காட்டப்படும் நிலுவைத் தொகை உள்ளக தணிக்கையாளர் / சட்டரீதியான தணிக்கையாளர் ஆகியோரால் தணிக்கை செய்யப்படுவதை வங்கிகள் உறுதிசெய்திட வேண்டும்.

(xi)       கணக்குகள் செயலற்றவையாக இருந்தபோதிலும், சேமிப்புக் கணக்குகளுக்கு உரிய வட்டி தொகை சீரான கால இடைவெளியில் வரவு வைக்கப்படவேண்டும்.   குறித்தகால வைப்பு முதிர்வடைந்து அதன் முதிர்வுத் தொகை கொடுக்கப்படாமல் நிலுவையில் இருந்தால், அதன்மீது சேமிப்புக் கணக்குக்கு உரிய வட்டி விகிதத்தில் வட்டி அளிக்கப்படும்.

3.  'செயலற்ற கணக்குகள்' பேரேட்டுக்கு மாற்றப்பட்ட கணக்குகளுக்கு உரிய வாடிக்கையாளர் அல்லது அவர்களின் சட்டபூர்வ வாரிசுதாரர்களைக் கண்டறிய சிறப்பு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளலாம்.

தங்கள் உண்மையுள்ள

(பிரசாந்த் சரன்)
தலைமைப் பொது மேலாளர் (பொறுப்பு)

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்