RBI/2008-09/431
DBOD.No.Leg.BC.123/09.07.005/2008-09
ஏப்ரல் 13, 2009
அனைத்து பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள்
(பிராந்திய கிராமிய வங்கிகள் நீங்கலாக)
அன்புடையீர்,
உடல் ஊனமுற்றவர்களுக்கு வசதியான வங்கிக் கிளைகள்/ஏடிஎம்களின் தேவை
உடல் ஊனமுற்றவர்களுக்காக வங்கிக்கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் சாய்தளம் அமைத்து, அவர்களது சக்கர நாற்காலி நகர வழிவகை செய்தும் இயந்திரத்தின் உயரத்தை பொருத்தமான அளவிற்கு குறைத்தும், வசதிகள் செய்து தர வேண்டுமென பல்வேறு ஆலோசனைகள், குறிப்பாக இந்திய அரசிடமிருந்து எங்களுக்கு வருகின்றன. மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இயந்திரத்தின் எண், எழுத்து பலகை பிரெய்லி முறையிலும் மற்றும் பேசும் மென்பொருளை இயந்திரத்தில் நிறுவிடவும் ஆலோசனைகள் வருகின்றன.
2. மேற்கண்ட ஆலோசனைகளை பரிசீலித்தபின், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அனைத்து தற்போதைய ஏடிஎம்கள்/எதிர்கால ஏடிஎம்கள் ஆகியவற்றில் சாய்தளம் அமைக்கப்பட்டு சக்கர நாற்காலி உபயோகிப்போர்/ உடல் ஊனமுற்றோர் எளிதாகச் செல்ல வசதியாகவும் ஏடிஎம்மின் உயரம் சக்கர நாற்காலி உபயோகிப்பவருக்கு பாதகமாக இல்லாதவகையிலும் ஏற்பாடு செய்யவேண்டும். வங்கிகள் தங்களது கிளை அலுவலகங்களின் நுழைவாயிலிலும் சாய்தளம் அமைத்து, உடல் ஊனமுற்றோர்/ சக்கர நாற்காலி உபயோகிப்போர் வங்கிக்குள் சென்று சிரமமின்றி பரிவர்த்தனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3. மேலும் வங்கிகள் புதிதாக உருவாக்கும் ஏடிஎம்களில் மூன்றில் ஒரு பங்கை பேசும் ஏடிஎம்களாகவும், எண் எழுத்துப் பலகை பிரெய்லி முறையிலும் இருக்கும்படி அமைக்கவேண்டும். மற்ற வங்கிகளுடன் கலந்துபேசி, முக்கிய இடங்களில் குறிப்பாக ஒவ்வொரு பகுதிக்கு ஒரு பேசும் மற்றும் பிரெய்லி ஏடிஎம் அமைக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். பார்வை பாதிக்கப்பட்டோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வங்கிகள் எங்கெங்கு இம்மாதிரி ஏடிஎம்களை அமைத்துள்ளனவோ, அவற்றைப் பற்றிய விவரங்களையும் அறிவிப்பையும் பார்வை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திடவேண்டும்.
தங்கள் உண்மையுள்ள
(பிரஷாந்த் சரண்)
தலைமைப் பொது மேலாளார்-பொறுப்பு
|