ஆகஸ்ட் 28, 2015
இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகம் மைசூர் நாணயங்களைத் தனிச் சிறப்பான காட்சிக்கு வைத்துள்ளது
ஆகஸ்ட் 20, 2015 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகம் மைசூர் நாணயங்களை சிறப்புப் பார்வைக்காக திறந்து வைத்துள்ளது. செயல் இயக்குனர் முனைவர் தீபாலி பந்த் ஜோஷி, இந்த சிறப்புக் காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வையொட்டி, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மைசூர் நாணயங்களைப் பற்றிய 20 பக்க கையேடு ஒன்றும் வெளியிடப்பட்டது. செயல் இயக்குனர் திரு. U. S. பாலிவால், ரிசர்வ் வங்கியின் மைய மன்றக்குழு இயக்குனர் பேராசிரியர் தாமோதர் ஆச்சார்யா மற்றும் மும்பை அலுவலகத்தின் மண்டல இயக்குனர் திரு. S. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம் (மைசூர் நாணயங்களைத் தனிச் சிறப்பான காட்சிக்கு வைத்துள்ளது)
பார்வைக்கு வைக்கப்பட்டதில் 112 மைசூர் நாணயங்கள் (13 தங்கம், 6 வெள்ளி மற்றும் 93 தாமிர நாணயங்கள்) தலிகோட்டா போருக்குப் பிந்தைய 1565 AD-க்கு பிறகு நான்கு நூற்றாண்டுகளுக்கான மைசூரின் பண வரலாற்றை அளிக்கிறது. மைசூர் உடையார்கள், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மைசூரை ஆண்ட ஆட்சியாளர்கள் காலத்தில் தங்க நாணயங்கள் மிகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. கன்டிரவ நரசராயா என்ற மன்னரே முதலில் தங்க நாணயங்களை வெளியிட்டார். இவை கன்டிரவ வராக மற்றும் அரை வராக என்று அழைக்கப்பட்டன. இவை முறையே 3.5 கிராம்கள் மற்றும் 1.7 கிராம்கள் ஆகும். இவற்றின் ஒரு பக்கத்தில் லட்சுமி நரசிம்மரும் மற்றொரு பக்கத்தில் மூன்று வரியில் நாகரி மொழியில் அவரது பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். மேலும், அவர் தங்க பணத்தையும் வெளியிட்டார். இதில் ஒரு பக்கம் நரசிம்மரும் மற்றொரு பக்கத்தில் மன்னரது பெயரும் இடம் பெற்றிருக்கும். திவான் பூர்ணய்யா பின்னர் மீண்டும் ஒருமுறை, கிருஷ்ணராஜா III (AD 1799 – 1832)-ன் கீழ் கித்தா கன்டிரவ பணம் (கித்தா என்றால் தடிமனாக என்று பொருள்) வெளியிட்டார். இந்த பாரம்பரியம், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் காலத்திலும் தொடர்ந்தது.
இவற்றையும் மற்றும் பலவற்றையும் பார்க்க இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகத்திற்கு வருகை தாருங்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் அருங்காட்சியகம், அமர் பில்டிங் (தரை தளம்) சர் பி.எம். சாலை, கோட்டை, மும்பை-400001-ல் செவ்வாய்க் கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை, காலை 10.45 மணி முதல் மாலை 5.15 மணி வரை திறந்திருக்கும். திங்கள் மற்றும் வங்கியின் விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.
அல்பனா கில்லவாலா
முதன்மை தலைமை பொதுமேலாளர்
Press Release : 2015-2016/519 |