மார்ச் 05, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட்
மீது பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, ஆக்சிஸ் வங்கி லிமிடெட் (வங்கி) மீது, பிப்ரவரி 27, 2018 அன்று, ரிசர்வ் வங்கி வழங்கிய வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தினால் ரூ. 30 மில்லியன் பண அபராதத்தை விதிக்கிறது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் சட்டப் பிரிவு எண் 47A (1) (c) (உடன் இணைந்த பிரிவு 46 (4) (i))-ன்படி, வங்கியால் வழங்கப்பட்ட மேற்கூறிய வழிகாட்டுதல் / அறிவுறுத்தல்களை தவறியதால், இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பண அபராதத்தை விதிக்கிறது.
இந்த நடவடிக்கை, கட்டுப்பாட்டு விதிகளைக் கடைபிடிப்பதிலுள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர எந்தவொரு பரிவர்த்தனையின் செல்லுபடியை, அல்லது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை பாதிக்கும் நோக்கத்தோடு அல்ல.
பின்புலம்
இந்த வங்கியின் நிதியியல் நிலைமையைப் பற்றி, ரிசர்வ் வங்கியின் சட்டரீதியான ஆய்வு மார்ச் 31, 2016-ல் மேற்கொள்ளப்பட்டபோது, ரிசர்வ் வங்கியின் செயல்படாத சொத்துக்கள் மதிப்பீட்டிற்கான ஒழுங்குமுறைகளை மீறியது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பெறப்பட்ட தொடர்புடைய ஆவணங்களை மீளாய்வு மற்றும் பரிசோதனையின் கண்டுபிடிப்பின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதால் ஏன் தண்டனையை விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பு வழங்கப்பட்டது.
விசாரணையின் முழு உண்மைகளையும், நிறுவனத்தின் பதில்களையும் பரிசீலித்தபின், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்/வழிகாட்டுதல்கள் பின்பற்றாத காரணத்தினால் மேற்கூறிய விதிமீறல் குறித்த குற்றச்சாட்டு நிரூபணமானது என்று முடிவு செய்து அபராதம் விதிப்பதற்கான தேவையை RBI உறுதி செய்துள்ளது.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2354 |