அக்டோபர் 14, 2019
ரிசர்வ் வங்கி பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட்
வைப்புதாரர்களுக்கான பணம் திரும்பப் பெறும் வரம்பை ரூ. 40,000/- ஆக
உயர்த்தியுள்ளது
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் இன் வைப்புதாரர்கள் தங்கள் கணக்குகளில் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் ₹ 25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) வரை திரும்பப் பெற அக்டோபர் 03, 2019 அன்று இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்ததை நினைவு கூரலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியின் பணப்புழக்க நிலை மற்றும் அதன் வைப்புதாரர்களுக்கு பணம் செலுத்தும் திறன் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்த பின்னர், பணம் திரும்பப் பெறுவதற்கான வரம்பை, முன்பு அனுமதிக்கப்பட்ட, ரூ. 25,000 உட்பட ரூ 40,000/- (ரூபாய் நாற்பதாயிரம் மட்டும்) ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேற்கண்ட தளர்வு மூலம், வங்கியின் வைப்புதாரர்களில் சுமார் 77% பேர் தங்கள் முழு கணக்கு நிலுவையையும் திரும்பப் பெற முடியும்.
சில நபர்களால் செய்யப்பட்ட மோசடி காரணமாக வங்கியின் நிதி நிலை கணிசமாக பலவீனமடைந்துள்ளது. இந்த விஷயம் இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தவுடன், ஒரு நிர்வாகியை நியமித்து, வங்கியிடம் இருக்கும் வளங்கள் பாதுகாக்கப்படுவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதோ அல்லது திசை திருப்பப்படுவதோ கூடாது என்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையில், வங்கியில் உள்ள மோசடி / நிதி முறைகேடுகள் மற்றும் அதன் கணக்கு புத்தகங்களை கையாளுதல் தொடர்பாக அதன் அதிகாரிகள் மற்றும் கடன் வாங்கியவர்கள் மீது வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், மகாராஷ்டிரா காவல்துறையின் பொருளாதார குற்றவியல் பிரிவு, இந்த விவகாரத்தில் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், வங்கியின் நிர்வாகியால் தடயவியல் கணக்காய்வாளர்கள், தொடர்புடைய பரிவர்த்தனைகளை ஆராய நியமிக்கப்பட்டுள்ளனர். 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 36AAA (5) (அ) இன் படி ஆர்பிஐ யால் நியமிக்கப்பட்ட நிர்வாகி மற்றும் 3 உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு, வங்கியை நடத்துவதில் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கும் பொருட்டில் இயங்கி வருகிறது.
ரிசர்வ் வங்கி, வங்கியின் செயல்பாடுகளில் முன்னேற்றங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது, மேலும் வங்கியின் வைப்புதாரர்களின் நலனுக்காக தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/942 |