06 நவம்பர் 2023
தமிழ்நாடு, வேலூர் மாவட்டம், ஜோலார்பேட் நகர கூட்டுறவு வங்கி
மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராத விதிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் ‘நகர கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர்கள் குழு தொடர்பான உத்தரவுகள்’ மற்றும் ‘இயக்குனர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குவது’ தொடர்பான உத்தரவுகளை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 12, 2023 தேதியிட்ட உத்தரவு மூலம், வேலூர் மாவட்டம், ஜோலார்பேட் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் (வங்கி) மீது ₹50,000 (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது.
இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது, வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல.
பின்னணி
மார்ச் 31, 2022 தேதியில் வங்கியின் நிதி நிலை அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய சட்டபூர்வ ஆய்வு மற்றும் ஆய்வு அறிக்கை, இடர் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் அது தொடர்பான அனைத்து கடிதங்களை ஆய்வு செய்ததில், வங்கி, தனது இயக்குனர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் பதில் மற்றும் நேர்முக விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்து, இவ்வங்கி இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறப்பட்ட உத்தரவுகளுக்கு கட்டுப்படாதது நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது.
(யோகேஷ் தயாள்)
தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2023-2024/1246 |