ஆகஸ்ட் 28, 2015
வங்கிகளுக்கு செப்டம்பர் 1 முதல், இரண்டாம் மற்றும் நான்காம்
சனிக்கிழமைகளில் விடுமுறை. வங்கிகள் வேலை செய்யும்
சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு உதவி சேவைகளை அளிக்க
இந்திய ரிசர்வ் வங்கி முன்வருகிறது
செப்டம்பர் 01, 2015 முதல் அனைத்து பட்டியலிடப்பட்ட, பட்டியலிடப்படாத வங்கிகள், --- பொது, தனியார், வெளிநாட்டு, கூட்டுறவு, பிராந்தியக் கூட்டுறவு, ஊரக வங்கிகள் அனைத்தும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் பொதுவிடுமுறையை அனுசரிக்கும். இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் தவிர, இதர சனிக்கிழமைகள் முழு வேலை நாட்களாக (வேலை செய்யும் சனிக்கிழமைகள் என்று பத்திரிகை வெளியீட்டில் குறிப்பிடப்படும்) அனுசரிக்கப்படும். இதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி தனது வேலைகளில் பின்வரும் மாற்றங்களை செப்டம்பர் 01, 2015 முதல் அறிவித்துள்ளது.
I. நிதிச்சந்தைப் பிரிவுகள்
(a) சனிக்கிழமைகளில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நிதிச்சந்தைப் பிரிவுகள் வேலை செய்யும் எல்லா சனிக்கிழமைகளிலும், தொடர்ந்து பரிவர்த்தனைகளுக்கு திறந்திருக்கும்.
i. வழக்கமான வேலை நாட்களில் உள்ளது போலவே , பணச்சந்தைப் பிரிவுகள் (அதாவது, அழைப்பு / அறிவுப்பு / குறித்த காலப் பணச்சந்தைகள் / ரிப்போ / CBLO) வேலை செய்யும் சனிக்கிழமைகளில் திறந்திருக்கும்.
ii. அந்நியச் செலாவணி சந்தை, அரசுப்பங்குச்சந்தை மற்றும் OTC டெரிவேடிவ் சந்தைகள் இப்போது உள்ளது போலவே, எல்லா சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும்.
(b) இந்திய ரிசர்வ் வங்கி வழக்கமான வேலைநாட்களில் உள்ளது போலவே, காலை 7 மணி முதல் இரவு 7.30 மணி வரை, நிலையான விகித ரிவர்ஸ் ரிப்போ மற்றும் இடைப்பட்ட சிறு ஆதார நிதியுதவி (MSF) பரிவர்த்தனைகளை வேலை செய்யும் சனிக்கிழமைகளில் நடத்திடும்.
(c) இந்திய ரிசர்வ் வங்கி நிலையான விகித LAF ரிப்போ வசதிகளை எல்லா வேலை செய்யும் சனிக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அளித்திடும். இது வெள்ளிக்கிழமை LAF இன் நீட்சியாகக் கருதலாம். தங்களுக்கு அளிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, வங்கிகள் வெள்ளிக்கிழமையன்று, மூன்று நாட்களுக்கு LAF வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். வரம்புக்குள் உபயோகப்படுத்தப்படாத மீதமுள்ள LAF வசதியை, வேலை செய்யும் சனிக்கிழமைகளில் இரண்டு நாட்களுக்குத் தேவையான அளவில் பெற்றுக்கொள்ளலாம்.
II. கொடுப்பு முறைகள்
i. இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் கொடுப்பு முறைகள் செயல்படாது. ஆனால், இதர வேலை செய்யும் சனிக்கிழமைகளில், முழு வேலை நாள் போல் வேலைசெய்யும். RTGS, NEFT, CTS காசோலை தீர்வுகள், ECS, RECS NECS ஆகியவை இந்த கொடுப்பு முறைகளில் அடங்கும்.
ii. இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளின் தேதியிடப்பட்ட எதிர்காலப் பரிவர்த்தனைகள் RTGS மற்றும் ECS முறைமைகளில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
III. வங்கித் துறை
வேலைசெய்யும் சனிக்கிழமைகளில், இந்திய ரிசர்வ் வங்கி, மண்டல அலுவலகங்களின் வங்கித்துறை முழு நாளும் செயல்படும். நிதிச்சந்தைப் பிரிவுகள் மற்றும் கொடுப்பு முறைமைகள் வேலை செய்ய இது உதவி சேவைகளை அளித்திடும். இந்த சனிக்கிழமைகளில், முகமை வங்கிகள் அரசுப்பணி சார்ந்த பரிவர்த்தனைகளில் ஈடுபடும்.
இந்திய அரசு ஆகஸ்ட் 20, 2015 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது (அரசிதழில் அது வெளியானது.- அசாதாரண பகுதி II, பிரிவு 3 (ii)-ன்படி). இதன்படி மாற்றுமுறிச் சட்டம் 1881-ன் சட்டப்பிரிவு 25 மற்றும் 26-ன் கீழ் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. அதன்படி இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 (2 of 1934)-ன் படி பட்டியலிடப்பட்ட வங்கிகள், பட்டியலிடப்படாத வங்கிகள் செப்டம்பர் 1, 2015 முதல் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளைப் பொது விடுமுறை நாட்களாக அனுசரிக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள், நிதிச்சந்தைகள், கொடுப்பு மற்றும் தீர்வுமுறைகளின் நெறிமுறையாளர் என்ற முறையில் தனது செயல்பாட்டுப் பகுதிகளில் சில உதவிகரமான மாற்றங்களை இதற்கேற்ப செய்துள்ளது.
மேற்குறப்பிட்ட ஏற்பாடுகள் 6 மாதங்களுக்குப் பின்னர் பரிசீலிக்கப்படும்.
அல்பனா கில்லவாலா
முதன்மைத் தலைமைப் பொது மேலாளர்
PRESS RELEASE : 2015 – 2016/528 |