செப்டம்பர் 05, 2016
முனைவர் உர்ஜித் R. பட்டேல் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்கிறார்
முனைவர் உர்ஜித் R. பட்டேல் அவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் 24 வது ஆளுநராக செப்டம்பர் 04, 2016 அன்று பொறுப்பேற்றார். அவர் துணை ஆளுநராக 2013 ஜனவரி முதல் பணியாற்றி வந்தார். முதல் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், ஜனவரி 11, 2016 முதல், மீண்டும் துணை ஆளுநராகப் பணியமர்த்தப்பட்டார். துணை ஆளுநராகப் பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி வந்ததோடு, முனைவர் பட்டேல் அவர்கள் பணக் கொள்கை வரையுருவை பலப்படுத்திச் சீரமைக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட வல்லுநர் குழுவிற்குத் தலைமை வகித்தார். BRICS நாடுகளுக்கிடையே இணைந்த செயல்பாடுகள் மற்றும் அவைகளின் மைய வங்கிகளுக்கிடையேயான ஒப்பந்த உருவாக்கம் ஆகியவற்றில் நமது நாட்டின் பிரதிநிதியாக துடிப்புடன் செயலாற்றினார். இதனால், அந்த BRICS நாடுகளின் மைய வங்கிகளுக்கிடையே பரஸ்பரம் உதவிபெறக்கூடிய Contingent Reserve Arrangement (CRA) அமைக்கப்பட்டது.
சர்வதேச நிதியத்திலும் (IMF) இவர் பணியாற்றியுள்ளார். 1996-1997ல் சர்வதேச நிதியத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு பணிநிமித்தமாக அனுப்பப்பட்டார். அவ்வமயம் அவர் கடன் சந்தை மேம்பாடு,வங்கித் துறை சீர்திருத்தங்கள், ஓய்வூதிய நிதி சீர்திருத்தங்கள் மற்றும் அந்நியச்செலாவணி சந்தையின் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்திய அரசின் நிதி (பொருளாதார விவகாரங்கள் துறை) அமைச்சகத்திற்கு ஆலோசகராகவும் 1998 முதல் 2001 வரை இருந்துள்ளார். இவற்றோடு, பொது மற்றும் தனியார் துறைகளில் சில சிறப்புப் பணிகளையும் ஏற்று செயல்பட்டுள்ளார்.
முனைவர் பட்டேல் பல மத்திய மற்றும் மாநில அரசு சார்ந்த உயர்மட்ட குழுக்களில் பங்கேற்று பணீயாற்றியுள்ளார்.அவை பின்வருமாறு. நேரடி வரிகளுக்கான செயல் படை (கேல்கர் கமிட்டி), சிவில் மற்றும் ராணுவ சேவைகளுக்கான ஓய்வூதிய முறைமையை மறு சீராய்வு செய்வதற்கான உயர்மட்ட வல்லுநர் குழு, பிரதம மந்திரியின் கட்டமைப்பிற்கான செயல்படை, தகவல் தொடர்பு விவரங்களுக்கான அமைச்சர்கள் குழு,விமானப் போக்குவரத்து சீரமைப்புக் குழு, மற்றும் சக்தி அமைச்சகத்தின் மாநில மின் வாரியங்கள் குறித்த வல்லுநர் குழு.
இந்திய பரந்த பொருளாதாரம் , பணக் கொள்கை, பொதுநிதி, இந்திய நிதியியல் துறை, சர்வதேச வர்த்தகம்,ஒழுங்குபடுத்துதல் சார்ந்த பொருளாதாரம் ஆகியவை குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
முனைவர் பட்டேல் லண்டன் பல்கலைக் கழகத்திலிருந்து B.Sc. பட்டத்தையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலிருந்து M.Phil பட்டத்தையும் ஏல் பல்கலைக் கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் Ph.D. (முனைவர்) பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
அல்பனா கில்லவாலா
முதன்மை ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2016-2017/590 |