ஜுன் 23, 2017
மொபைல் மின்னணு வங்கியியல் மற்றும் தவறான விற்பனை
தொடர்பான புகார்களை உள்ளடக்கிய வண்ணம் வங்கிக் குறை தீர்ப்பாளர் திட்டத்தை
இந்திய ரிசர்வ் வங்கி, திருத்தியமைக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக் குறை தீர்ப்பாளர் திட்டம் 2006-ன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதாவது, காப்பீடு / பரஸ்பர நிதிகள் / மூன்றாம் நபர் முதலீடுகளை வங்கிகள் விற்பதன் மூலம் ஏற்படும் குறைகளும் இதனுள் அடங்கும். திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ், இந்தியாவில் மொபைல் / மின்னணு வங்கி தொடர்பான சேவைகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளைப் பின்பற்றாத வங்கிகளைப் பற்றி ஒரு வாடிக்கையாளர் புகார் அளிக்க முடியும்.
வங்கிக் குறை தீர்ப்பாளரின் நிதி சார்ந்த அதிகார வரம்பு தற்போதுள்ள 1 மில்லியன் ரூபாயிலிருந்து 2 மில்லியன் ரூபாய்க்கு அதிகரித்துள்ளது. புகார் அளிப்பவருக்கு வீணாகும் நேரம், செலவினங்கள், தொந்திரவு மற்றும் மன உளைச்சல்களை கருத்தில்கொண்டு வங்கிக் குறை தீர்ப்பாளர் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் அதிகமில்லாமல் இழப்பீடு தொகையைப் புகார் அளிப்பவருக்கு வழங்க முடியும்.
இத்திட்டத்தின் கீழ் பரஸ்பர உடன்படிக்கையால் தீர்வு காணும் நடைமுறையும் திருத்தி அமைக்கப்படுகிறது. தற்போதைய திட்டத்தின் பிரிவு 13(c)-ன் கீழ் நிராகரிக்கப்பட்ட புகார்களுக்கு, முன்னர் மேல்முறையீடு மறுக்கப்பட்டிருந்தது. அவற்றிற்கு இப்போது முறையீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, ஜுன் 16, 2017 தேதியில் வங்கிக் குறை தீர்ப்பாளர் திட்டம்
2006-ன் திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்டது. இந்த திருத்தியமைக்கப்பட்ட திட்டம், ஜூலை 01, 2017 தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டம் இந்திய ரிசர்வ் வங்கியின் https://www.rbi.org.in/commonman/English/Scripts/AgainstBank.aspx இணையதளத்தில் கிடைக்கப்பெறும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு - 2016-2017/3473 |