வங்கிகளில் உள்ள “கோரப்படாத வைப்புகள்” குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் விழிப்புணர்வு அறிவிப்பு |
22 ஜூலை 2022
வங்கிகளில் உள்ள “கோரப்படாத வைப்புகள்” குறித்து
இந்திய ரிசர்வ் வங்கியின் விழிப்புணர்வு அறிவிப்பு
வங்கிகளில் 10 ஆண்டுகளாக இயக்கப்படாத சேமிப்பு / நடப்புக் கணக்குகளில் உள்ள இருப்புகள் மற்றும் முதிர்வுக்குப் பின் 10 ஆண்டுகளாக கேட்டுபெறப்படாத கால வைப்புகள் “கோரப்படாத வைப்புகள்” என்று வகைப்படுத்தப்படும். அத்தகைய வைப்புகளில் உள்ள தொகை இந்திய ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படுகின்ற “வைப்புதாரர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி”யில் சேர்க்கப்படும். ஆயினும், வைப்புதாரர்கள் தங்களின் வைப்புகளில் உள்ள தொகையை, தாங்கள் எந்த வங்கிகளில் வைத்திருந்தனரோ அந்த வங்கிகளிடமிருந்து பின்னாளில் கூட உரிய வட்டியுடன் திரும்ப கேட்டுப் பெற உரிமையுண்டு. வங்கிகளும், இந்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பிரசாரங்கள் செய்து கொண்டிருப்பினும், கோரப்படாத வைப்புகளின் தொகை அதிகரிக்கும் போக்கையே காட்டுகிறது.
வைப்புதாரர்கள் தாம் இயக்க விரும்பாத சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளை முடிக்காத காரணத்தாலும், குறித்த கால வைப்புகளை முதிர்வுக்குப் பின் கேட்டுப்பெறாததாலும், கோரப்படாத வைப்புகளின் அளவு அதிகரிக்கிறது. சில வைப்புதாரர்களின் இறப்புக்குப் பின்னர், அவர்களின் நியமனதாரர்கள் அல்லது வாரிசுதாரர்கள் அந்த வங்கிகளிடம் வைப்புகளில் உள்ள தொகையைக் கேட்டுப் பெற முன்வராத நிகழ்வுகளும் உண்டு. வைப்புதாரர்கள் அல்லது வைப்புதாரர்களின் நியமனதாரர்கள் / வாரிசுதாரர்கள் இத்தகைய வைப்புகளைக் கண்டறிந்து கேட்டுப் பெற உதவியாக, விவரங்களுடன் கூடிய “கோரப்படாத வைப்புக”ளின் பட்டியலை வங்கிகள் தங்களின் இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிட்டுள்ளன. பொதுமக்கள் இத்தகைய வைப்புகளை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கிறோம்.
(யோகேஷ் தயாள்)
தலைமை பொது மேலாளர்
செய்திக்குறிப்பு: 2022-2023/S84 | |